பக்கம் எண் :

இலக்கிய ஆராய்ச்சி

7


ஆனால், அந்தக் குழந்தையின் தாய் அதன் நடையைக் காணும் போது, இந்த
எண்ணங்களை எல்லாம் கடந்து, உள்ளம் உருக, ஊன்உருக, அந்த நடையழகைக்
கண்டு குழைவாள். கலைஞன் ஒருவன் வந்து கண்டாலும், அதன் அழகைப் பலவாறு
உணர்ந்து பருகுவான்; குழந்தையின் நடையில் விளங்கும் ஆடல் துள்ளல்
முதலியவற்றைக் கண்டு ஆடுவான், துள்ளுவான், பூரிப்பான்; தன் உள்ளத்தை அதன்
பின்னே ஆடித் துள்ளிவிட்டுத் தானும் குழந்தையாவான். 
 
     வேலைக்காரிக்கு அதன் வரலாறு பழமையைச் சிந்திப்பதற்கு உரிய பகுதியாகிறது;
மருத்துவருக்கு அதன் உடல்நிலை பகுத்தறிவுக்கு உரிய பொருளாகிறது; ஆனால்
குழந்தையைப் பெற்று வளர்த்து உலகிற்கு நல்கும் தாய்க்குக் களிப்பூட்டுகின்ற அழகின்
சிறப்பே கலைஞனுக்கும் விருந்தாகின்றது. 
 
     மூவகை ஆராய்ச்சியும் வேண்டியவைகளே; ஆயின், யாருக்கு எது தகும் என்ற
தெளிவு இருக்க வேண்டும். 
 
     காவியம் ஒன்றைக் கற்கப் புகுகின்றவர் வரலாறு நோக்கமாகக் கொண்டால்,
அதன் ஆசிரியர், அவர் வாழ்க்கை, அவருடைய காலம், சூழ்நிலை முதலியவற்றை
ஆராயலாம். 
 
     மொழியியல் ஆராய்ச்சியோ, இலக்கண ஆராய்ச்சியோ சொற்பொருள்
ஆராய்ச்சியோ மேற்கொள்கின்றவர் காவியத்தின் சொற்களிலும் சொற்களின்
பொருள்களிலுமே மூழ்கியிருக்கலாம். 
 
     ஆனால், காவியத்தைக் கலைநோக்கோடு கற்கின்றவர்கள் இந்த இருநிலையும்
கடந்து அப்பால் உயர்ந்து நிற்க வேண்டும். குழந்தையின் தாய் காணும் அழகைக்
கலைஞனும் கண்டு களிப்பதுபோல, காவியத்தை உலகிற்கு