கடமைகளை மேற்கொள்கிறான்; மற்றவர்களுக்கும் அவற்றைச் சொல்லிச் சொல்லி மகிழ்கிறான். | இந்த மூவகையாரையும் ஆராய்ச்சியாளர் என்றே கூற வேண்டும். ஆனால், மூவர்க்கும் வேறுபாடு உண்டு. முதலில் வந்தவன் மல்லிகைப் பந்தலின் வரலாற்றை ஆராய்ந்தான்; அது போல் தானும் ஒரு பந்தல் வைத்து மல்லிகை விற்றுப் பணம் சேர்க்கும் முயற்சியால் தூண்டப் பட்டிருக்கலாம். இரண்டாவதாக வந்தவன் மரநூல் ஆராய்ச்சி செய்தான்; அவனுக்கு மல்லிகைப் பந்தலாக இருந்தாலும் ஒன்றே; முள்ளியும் கள்ளியும் அடர்ந்த புதராக இருந்தாலும் ஒன்றே; எல்லாம் அவனுக்கு ஒரே வகைதான். அவனுக்கு உள்ளது அறிவுப் பசி. ஆகையால், மரநூல் ஆராய்ச்சியே அவன் விரும்புவது. மூன்றாவதாக வந்தவன் அறிவுமட்டும் கொண்டு வரவில்லை; உணர்வுக்கு விருந்தளித்து அங்கே திளைத்தான். மல்லிகைப் பந்தலின் உண்மையான பயன் எதுவோ, இயற்கை என்ன பயன் கருதி அதை வளர்த்து வருகிறதோ, அந்தச் சிறந்த பயனைக் கண்டவன் அவன்தான். அவன் செய்த ஆராய்ச்சியின் பயன் என்ன என்று அவனைக் கேட்டால், உணர்ந்ததை முற்றும் சொல்ல முடியவில்லையே என்று திகைப்பான்; சென்று பயன் நுகருமாறு நம்மையும் தூண்டுவான். தான் இன்புறுவதும் உலகம் இன்புறுமாறு தூண்டுவதுமே அவனுடைய ஆராய்ச்சியால் விளையும் பயன். | இரண்டு வயதுள்ள குழந்தை நடக்கும்போது அந்த வீட்டு வேலைக்காரி என்ன எண்ணுவாள்? அதன் பிறப்பு, கவிழ்ந்த நிலை, தவழ்ந்த நிலை, அடி எடுத்து வைத்த நிலை, உண்ட உணவுகள், அணிந்த ஆடைகள் முதலியவற்றை எண்ணுவாள். அந்த வீட்டு மருத்துவர் அல்லது ஓர் உடலியல் அறிஞர் கண்டால், குழந்தையின் வன்மை, மென்மை, உணவைச் செரிக்கும் ஆற்றல், தசைநார்கள் இயங்கும் தன்மை முதலானவற்றை பற்றி ஆராய்வார். | | |
|
|