பக்கம் எண் :

  14. பாட்டின் விடுதலை
 
     கலைகளிலே உயர்ந்தது பாட்டுக் கலை, அவ்வாறு பாட்டுக் கலை மற்றக்
கலைகளைவிட உயர்வு பெற்று வாழ்வதற்குக் காரணம் என்ன?
 
     மனிதனும் வளர்ந்து வந்தான்; கலைகளும் வளர்ந்து வரத் தொடங்கின. மனிதன்
நாகரித்தின் படிகளில் மெல்ல மெல்ல ஏறிவரத் தலைப்பட்டான். கலைகளும்
படிப்படியாக மாறுதல்கள் அடைந்து வளரத் தலைப்பட்டன. மனிதனுக்காக ஏற்பட்ட
கலைகள் அவனால் படைத்துக் காக்கப்பட்ட கலைகள் - அவனுக்குத் தக்கவாறு
வளர்ச்சியுற்றுப் பயன்பட வேண்டும் அல்லவா?
 
     ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக- நூறாயிரக் கணக்கான ஆண்டுகளாக -
மனிதன் வளர்ந்து பண்பட்டு வருகின்றான். ஆனால் வரலாறு என்பது அத்துணைக்
காலத்தையும் அளந்தறிய முடியாமல் திகைக்கின்றது. சில ஆயிர ஆண்டுகளே
வரலாற்றின் கண்ணுக்குப் புலப்படுகின்றன. அவைகளும் மங்கலாகவே தோன்றுகின்றன;
தெளிவு காணப்படவில்லை. மனிதனுடைய பண்டைய வரலாற்றில் தெளிவு
காணப்படாதபோது, அவனுடைய கருவிகளாகிய கலைகளின் வரலாற்றில் மட்டும்
தெளிவுகாண முடியுமா?
 
     ஆகவே, மனிதனின் வளர்ச்சியையும் அவனை ஒட்டிய கலைகளின்
வளர்ச்சியையும் இன்று ஒப்பிட்டு அறிய