பக்கம் எண் :

பாட்டின் விடுதலை 101
 
முடியாத நிலை இருக்கின்றது. ஆனால், ஒன்று மட்டும் கூறலாம். மனிதனுடைய
தொடக்க வரலாறு இன்று பிறக்கும் குழந்தையிடம் சுருங்கிய அளவில் காணப்படுகின்றது
அன்றோ? அது போலவே, கலைகளின் தொடக்க வரலாறும் இன்று பிறந்து வளரும்
குழந்தையைக் கண்டு ஒருவாறு சுருங்கிய அளவில் அறியக் கிடக்கின்றது. குழந்தை
அழுகின்றது. சிரிக்கின்றது. தொடக்கத்தில் எல்லா மக்களும் அழுதனர்; சிரித்தனர்.
குழந்தையின் அழுகையும் சிரிப்பும் வெறுங் கண்ணீருடனும் முக மலர்ச்சியுடனும்
நிற்கவில்லை; சிறு சிறு ஒலிகளோடும் அசைவுகளோடும் கலந்தே அதன் அழுகையும்
சிரிப்பும் புலப்படுகின்றன. அழுகையின் போது ஒருவகை ஒலி, சிரிப்பின் போது ஒரு
வகை ஒலி, அழுகையின் போது ஒருவகையான கைகால் அசைதல், சிரிப்பின் போது
வேறொரு வகையாகக் கைகால் அசைதல், ஆகிய இவற்றைக் காண்கிறோம். அது
போலவே, தொடக்க நிலையில் மனிதனும் தன் இன்பதுன்ப உணர்ச்சிகளை
வெறுஞ்சிரிப்பாலும் அழுகையாலும் புலப்படுத்தவில்லை. பல ஒலிகளோடு, கலந்து
புலப்படுத்தினான்; அந்தந்த உணர்ச்சிகளுக்கு ஏற்ப அசைந்தும் ஆடியும்
புலப்படுத்தினான்.
 
     குழந்தை வளர வளர, கைகால் அசைவுதான் மாறி வருகின்றன; அழுகையின்
ஒலியிலும் சிரிப்பின் ஒலியிலும் பல வகை மாறுதல்கள் நேர்கின்றன. தொடக்கத்தில்
இரண்டே வகையாக இருந்த ஒலியும் அசைவும் மெல்ல மெல்லப் பல்வேறு வகையாக
மாறி அமைகின்றன. இரண்டு வகையாகப் பொதுப்பட இருந்த உணர்ச்சி பல நூறு
வகையாகப் பாகுபாடு பெற்று வெளிப்படுகின்றது. அந்தப் பலவகை உணர்ச்சிகளையும்
புலப்படுத்தப் பல்வேறு வகையான கைகால் அசைவுகள் இல்லை; பல்வேறு வகையான
கண்ணீரும் இல்லை; பல்வேறு வகையான முக மலர்ச்சியும் இல்லை; ஆனால், பல்வேறு