பக்கம் எண் :

102 இலக்கிய ஆராய்ச்சி
 
வகையான ஒலிகள் மட்டும் உள்ளன. ஆகவே, மற்றவை பல்வேறு வகையாக வளர
முடியாமல் மாறியமைய முடியாமல் நிற்கும்போது, குழந்தையின் வாயில் பிறக்கும்
ஒலிகள் மட்டுமே பல்வேறு வகையாகப் பாகுபாடு பெற்று வளர்ந்து அமைகின்றன.
அப்போது குழந்தை பேசுவதாகக் கூறப்படுகின்றது. குழந்தையின் பேச்சில் துன்ப
உணர்ச்சியும் இன்ப உணர்ச்சியும் தெளிவாகப் புலப்படுகின்றன. குழந்தை வளர்ச்சி
பெற்றதாகக் கருதப்படுகின்றது. பேச்சு அந்தவளர்ச்சியின் அறிகுறியான உயர்ந்த
கலையாகக் கருதப்படுகின்றது. அந்தப் பேச்சாற்றல் பெற்று வளர்ந்தபின், கைகால்
அசைவுகளும் மற்றவைகளும் குறைந்து பின்னணியில் நிற்கின்றன.
 
     தொடக்க நிலையில் மனிதனும், ஆடியும், பாடியும் தன் உணர்ச்சிகளைப்
புலப்படுத்தினான். அவன் துன்புற்ற போது அவனுடைய ஆடலும் பாடலும்
துன்பத்தையும் புலப்படுத்தின; அவன் இன்புற்றபோது அவனுடைய ஆடலும் பாடலும்
வேறு வகையாக அமைந்து இன்பத்தைப் புலப்படுத்தின. அவனுடைய ஆடல்தான்
பழங்காலத்துக் கூத்து (நடனம்); அவனுடைய பாடல் தான் பழங்காலத்து இசை.
ஆனால், அவனுடைய உணர்ச்சிகள் பலவகையாகப் பாகுபாடு பெற்று வளரத்
தொடங்கியபோது, அவ்வவற்றை உணர்த்த ஆடலும் பாடலும் சிறிதளவே பயன்பட்டன;
ஒலிகளின் வேறுபாடே பெரிதும் பயன்படுவதாயிற்று. ஆகவே, அவன் மொழியை
வளர்க்க முனைந்தான்; ஓய்வு நேரத்தில் பொழுது போக்கிற்காக ஆடலையும்
பாடலையும் விட்டுவைத்து, மற்ற நேரமெல்லாம் மொழியை வளர்த்துப் போற்றத்
தொடங்கினான். இவ்வாறு ஓய்வு நேரத்திற்கென வைக்கப்பட்டவைகளே கலைகள் என்று
போற்றப்பட்டன.