ஆகவே வாழ்க்கையிலிருந்து முளைத்த கலைகள் வாழ்க்கையில் ஓய்வான இன்பப் பகுதிக்காக என்று ஒதுங்கி வளரத் தொடங்கின. தொடக்கத்தில் வாழ்க்கையிலிருந்து பிரிக்க முடியாமல் கலந்திருந்த ஆடல் பாடல் முதலியவை, நாளடைவில் வாழ்க்கையின் உழைப்புப் பகுதியில் சேராமல், இன்பப் பகுதிக்கு மட்டும் உரியவைகளாக நின்றன. |
எடுத்துக்காட்டாக ஒன்றைக் குறிக்கலாம். பறை என்பதும் இசைக் கருவியே; யாழ் என்பதும் இசைக் கருவியே. தொல்காப்பியர் இவற்றைக் கருப் பொருள்களாகத் தொகுத்து உரைக்கும் போது குறிப்பிடுகின்றார். |
| தெய்வம் உணாவே மாமரம் புள்பறை செய்தி யாழின் பகுதியொடு தொகைஇ அவ்வகை பிறவும் கருவென மொழிப. |
(தொல், பொருள். 18)
|
பறையையும் யாழையும் பிரித்துக் கூறிய காரணம் என்ன? பறை என்பது மக்கள் அறுவடை முதலிய தொழில்களைச் செய்யும் போது, அவர்களுக்கு அவ்வத் தொழில்களில் ஊக்கம் பிறக்கும் வகையில் ஒலிக்கப் பயன்பட்டது. ஆனால் யாழ் என்பது வேறு வகையானது; தொழில் செய்து முடிந்து ஓய்ந்திருக்கும் போது பயன்பட்டது. உழைக்கும் போது ஊக்கம் ஊட்ட உதவாமல் ஓய்ந்திருக்கும்போது இன்பம் ஊட்ட உதவியது. ஆகவே, கருப்பொருள்களில் சிறந்தவற்றை மட்டும் குறிப்பிட்ட தொல்காப்பியனார் பறையையும் யாழையும் இருவேறு வகையாக எடுத்துரைத்தார். தொடக்கத்தில் இசைக் கருவி என அவை ஒன்றாகவே இருந்தன. பிறகு இவ்வாறு வெவ்வேறு துறைக்கு உரியனவாகப் பிரிந்தன. ஒன்று உழைப்புப் பகுதிக்கும் மற்றொன்று இன்பப் பகுதிக்கும் |