பக்கம் எண் :

104 இலக்கிய ஆராய்ச்சி
 
உரியன ஆயின. இன்பப் பகுதிக்கு உரியது மட்டுமே நாளடைவில் கலையாகப்
போற்றப்பட்டது.
 
     இவ்வாறே தொடக்கத்தில் ஓவியம் வாழ்வுக்கு உரிய கருவியாகப் பிறந்தது.
மனிதன் தன் கண்ணெதிரில் இல்லாத ஒருவனுக்குத் தன் கருத்தைத் தெரிவிப்பதற்கு
ஓவியத்தைப் பயன்படுத்தினான். ஓவியத்தைக் கண்டவன் அதை எழுதியவனுடைய
கருத்தைக் கண்ணால் உணர்ந்து கொள்ள முடிந்தது. ஆனால், அது அரிய முயற்சியாக
இருந்தது; எல்லாக் கருத்துக்களையும் உடனுக்குடன் புலப்படுத்த இயலாததாகவும்
இருந்தது. ஆகவே அறிகுறியான சில கோடுகளையும் கீற்றுக்களையும் வளைவுகளையும்
எழுதிப் பல்வேறு வகையாக வளர்ந்த கருத்துகளைப் பாகுபடுத்தி உணர்த்த முயன்றான்.
அதுவே எழுத்து எனப்படுவது. பூ என்ற ஒன்றை உணர்த்துவதற்காக மனிதன்
தொடக்கத்தில் பூவின் உருவத்தையே தீட்டினான். நாளடைவில் பூ என்று ஒலிக்கும்
ஒலியின் அறிகுறியான எழுத்தை மட்டும் எழுதத் தொடங்கினான். சீன மொழியில்
உள்ள எழுத்துக்களை ஆராய்ந்தால் இந்த உண்மை நன்றாக விளங்கும். அந்த
மொழியில் எழுத்துகள் பலவும் ஓவியங்கள் போலவே அமைந்துள்ளன; மாறிய
மாறுதலை அவை தெரிவிக்கின்றன. நீர்வேட்கையை அம்மொழியில் புலப்படுத்த
வேண்டுமானால், நாக்கைப்போல் வளைந்த கோடு இட்டு, அதன் மேல் நீர்த்துளிபோல்
இரண்டு புள்ளி இடவேண்டும். உற்றுக் கேட்டலை எழுத வேண்டுமானால், கதவுபோல்
கோடு இட்டு அதனை அடுத்துக் காதுபோல் வளைந்த வடிவம் எழுத வேண்டும்.
இவ்வாறே பழங்காலத்தில் எல்லா நாட்டிலும் இருந்திருக்க வேண்டும். பழந்தமிழ்
நாட்டிலும் இவ்வாறு வழங்கியிருந்த எழுத்துக்களைக் 'கண்ணெழுத்து' 'கோலெழுத்து'
என்ற பெயரால் குறிப்பிடுவதும் உண்டு.