பக்கம் எண் :

பாட்டின் விடுதலை 107
 
     இந்த இசை, தொடக்கத்தில் பொருளற்ற ஒலியொழுங்கும் பொருளுடைய
ஒலியொழுங்கும் கலந்ததாக நின்றது. இன்றும் இரண்டும் ஓரளவே கலந்து நிற்கின்றன.
பொருளற்ற ஒலியொழுங்கு உள்ளத்து உணர்ச்சியைப் புலப்படுத்த வல்லதாக
இருப்பதாலேயே போற்றப்படுகின்றது.
 
     இசையில் கலந்து நின்ற இருவகை ஒலிகளுள், பொருள் ஒலிகள் என்பவை
சொற்கள் பல அமைந்த அமைப்பாகும்; அவற்றை மனிதனுடைய குரல் மட்டுமே
தெளிவாக இசைக்க முடியும், ஆனால், பொருளற்ற உணர்ச்சி ஒலிகளைப்
பொறுத்தவரையில், அவனுடைய குரலைவிட யாழ், குழல் முதலிய இசைக் கருவிகள்
சிறப்புற இசைக்க முடியும். ஆகவே, மனிதன் இசைக் கருவிகளைக் கண்டுபிடித்து
அவற்றை விடாமல் பயன்படுத்தத் தொடங்கினான். ஆனால் காலப் போக்கில் அதிலும்
மாறுதல் நேர்ந்தது.
 
     பொருளற்ற உணர்ச்சி ஒலிகளையே இசைத்து மிக்க இன்பம் கண்ட மனிதன்,
மெல்ல மெல்ல மாறி, பொருள் ஒலிகளை மிகுதியாக இசைத்து இன்பம் காணத்
தொடங்கினான். பறவைகளைப் போல் உணர்ச்சி ஒலிகளை மிகுதியாக இசைத்த
காலத்தில், அவனுடைய செவிப்புலன் வாயிலாக உள்ளம் குழைந்து இன்புற்றான். இம்
மாறுதல் நேர்ந்த பிறகு, பொருள் ஒலிகளை மிகுதியாக இசைத்துப் பயின்ற போது,
செவிப்புலன் வாயிலாக மட்டும் அல்லாமல் அறிவின் வாயிலாகவும் உள்ளம் குழைந்து
இன்புற்றான். இன்னும் கூறப் புகுந்தால், செவிப்புலன் வாயிலாகப் பெறும் இன்பம்
மிகுந்தது எனலாம். இந்த நிலையில், பாட்டு என்னும் கலை, உணர்ச்சி ஒலிகளின்
துணையையும் கடந்து இசைக் கருவிகளின் துணையையும் கடந்து வாழ வல்லதாய்
விளங்கலாயிற்று. 'பாட்டு' (Poetry) என்னும் உயர்கலை பிறந்த நிலை இதுவே ஆகும்.