நாளடைவில் பாட்டு, ஆடலைவிட்டுத் தனியே பிரிந்து வாழத் தலைப்பட்டது; இசையோடு மட்டும் கூடி வாழப் பயின்றது. மக்களின் பேச்சிலும் இந்த வேறுபாட்டைக் காணலாம். குழந்தைகள் அடிக்கடி கைகால் அசைக்காமல் ஆடாமல் பேச முடிவதில்லை; வளர வளர அமைதியாக இருந்து பேசக் கற்றுக்கொள்கின்றன. கல்லாத மக்கள் பேசும்போதும் கைகளை அடிக்கடி ஆட்டியும் தலையை அசைத்தும் பேசக் காண்கின்றோம். கற்றறிந்த மக்களின் பேச்சில் பேசும் உறுப்புகளைத் தவிர மற்றக் கை, தலை முதலியவை அசைதலும் ஆடுதலும் மிகக் குறைவு. சிறந்த சொற்பொழிவாளர் ஆடாமல் அசையாமல் நின்று பேசியே கேட்போரின் உள்ளங்களை ஆட்டி வைக்கின்றார். பேச்சுத் துறையில் கை முதலியவற்றின் தொழில் குறைந்து வருதல் போலவே, பாட்டுத் துறையில் ஆடற் கலையின் துணை குறைந்து, ஆடல் இல்லாமலே பாட்டு வாழும் நிலைமை ஏற்பட்டது. | அடி, தொடை என்பன பாட்டுக்கும் ஆடற் கலைக்கும், இருந்த பழைய உறவைத் தெரிவிக்கும் சொற்கள். அவற்றை இன்று யாப்பிலக்கணத்தில் (பாட்டின் இலக்கணத்தில்) காண்கின்றோம். அடி என்பது ஆடற்கலையில் அடி எடுத்து வைத்து ஆடும் 'பதம்' என்பதைக் குறிப்பதாகும். தொடை என்பது அதற்கு இயையக் கை முதலியவற்றைத் தொடுத்து இயங்குவதைக் குறிக்கும். இவை இன்று பாட்டின் அமைப்பைத் தெரிவிக்கும் சொற்களாக வழங்குகின்றன. | இவ்வாறே, சீர், தளை என்னும் சொற்கள், பாட்டுக்கும் இசைக் கலைக்கும் இருந்த பழைய உறவைத் தெரிவிக்கின்றன. (இன்னும் உறவு ஓரளவு இருந்து வருகின்றது.) சீர் என்ற சொல்லே இனிய ஒலி என்னும் பொருள் உடையது. இசைக்கு மிகத் துணையான தாளத்தை மிக நுட்பமான | | |
|
|