முறையில் செவிக்குப் புலனாகும் வகையில் அமைப்பதே தளை. | ஆடற் கலையிலிருந்து இசை தனியே பிரிந்து வளர்ந்தது போல, இசைக் கலையிலிருந்து பாட்டும் தனியே பிரிந்து வளரத் தலைப்பட்டது. ஆனால், ஆடற் கலையிலிருந்து இசை முழு விடுதலை பெற்று வளர முடிந்தது போல் இசைக் கலையிலிருந்து பாட்டு முழு விடுதலை பெற முடியவில்லை. ஓரளவே விடுதலை பெற்றது. எந்த அளவிற்கு? உணர்ச்சி ஒலிகளைத் துணையாகக் கொண்ட நிலையிலிருந்தும் விடுதலை பெற்ற அளவிற்கே ஆகும். | பாட்டு (Poetry) என்பதிலும் ஒலிநயம் (Rhythm) காணப்படுகின்றது அன்றோ? அதற்குக் காரணம் இன்னும் அதை விடாமல் பற்றியிருக்கின்ற இசைக் கலையின் செல்வாக்கேயாகும். மனிதன் கலையுலகில் நுழையும் போதெல்லாம், இன்னும் குழந்தையாக மாறி நிற்பதே அந்தச் செல்வாக்கிற்குக் காரணம். அறிவை எவ்வளவோ வளர்த்த பின்னரும், உணர்ச்சி வகைகளை மட்டுப்படுத்தி எண்பது கோடி எண்ணக் கற்றுக்கொண்ட பின்னரும், மனிதன் குழந்தை நிலையிலிருந்து முழு விடுதலை பெறவில்லை. ஆகவே, அவன் உணர்ச்சிவயமாக இருந்து கலையில் ஈடுபடும்போதெல்லாம், மீண்டும் குழந்தைத் தன்மை பெற்று ஒலியொழுங்கை நாடுகின்றான். ஆடலை அடியோடு மறந்து வாழ்பவனும் பாடலை அவ்வாறு மறந்து வாழ முடியாமல் இருப்பதற்குக் காரணம் இதுவே. மனிதனுடைய உடலில் நாடிகள், இதயம், நுரையீரல், மற்ற அசைவுகள் எல்லாம் ஒழுங்குபட இயங்குகின்றன. அதனால் அவன் புலன்வயப்பட்டு உணரும்போது அத்தகைய ஒழுங்கை மீற முடியவில்லை. அதனால், எந்தப் பாட்டிலும் ஒருவகை ஒலிநயம் அமைந்திருக்கக் காண்கின்றோம். | | |
|
|