ஒட்டிப் பாட்டுக் கலையும் வளர விரும்புவதே இந்த விடுதலை வேட்கைக்குக் காரணமாகும். | மனிதனுடைய உணர்ச்சி ஒன்றையே பாகுபாடு இல்லாமல் புலப்படுத்தும் நிலையிலிருந்து உணர்ச்சியோடு கலந்து எண்ணங்களைப் பலவேறு வகையாகப் புலப்படுத்தும் நிலை வரையில் கலை வளர்ந்து வந்துள்ள வரலாற்றை ஆராய்ந்தால்தான் பாட்டின் பிறப்பும் வளர்ச்சியும் விடுதலையும் தெளிவாகின்றன. | பலவகைக் கட்டுப்பாடுகளிலிருந்து பாட்டு விடுதலைப் பெறப் பெற, பல்வேறு துறைகளில் உண்மைகளைப் புலப்படுத்தும் ஆற்றலையும் அது பெற்று வருகின்றது. மற்றக் கலைகளுக்கு இல்லாத சிறப்பு இப் பாட்டுக் கலைக்கு இருப்பது இதனால் ஆகும். மனிதனின் வளர்ச்சியோடு மற்றக் கலைகள் போட்டியிட முடியவில்லை. ஆனால், பாட்டுக் கலையோ மனிதன் வளரும் அளவிற்குத் தானும் வளர்ந்து அவனுக்கு உற்ற துணையாக நிற்கின்றது. மனிதன் குழந்தை போன்ற உணர்ச்சி மிக்க நிலையிலிருந்து அறிவு நிலைக்கு வளர்ந்து வருகின்றான். பாட்டும் அவனுக்கேற்ப வளர்ந்துவருகின்றது. மனிதன் எவ்வளவு வளர்ந்தும் உணர்ச்சி நிலையை அடியோடு துறக்க முடியவில்லை. பாட்டும் அவனுக்கு ஏற்ப, உணர்ச்சியின் அடிப்படையில் உண்மைகளைப் புலப்படுத்த வல்லதாக அமைந்துள்ளது. உணர்ச்சி நிலைக்கு மட்டும் பயன்படும் மற்றக் கலைகள் பின்னே ஏங்கி நிற்க, பாட்டுக் கலை அவற்றிலிருந்து விடுதலை பெற்று மனிதனுக்குத் தோழனாய் முன்னேறுகின்றது. இது பாட்டுக் கலையின் உயர்வுக்குக் காரணமாகும். | | |
|
|