சிறப்பில்லாத சிறு சிறு பாட்டுகளிலேயே திளைத்திருக்கக் காணலாம். கலையுணர்வால் வளர்ந்து கருத்துச் செல்வத்தை நாடும் மக்கள், ஓசைநயம் குறைந்த (ஆனால் மிக நுட்பமான அளவில் அமைந்த) அகவலே ஆயினும், விருத்தமே ஆயினும், உயர்ந்த உணர்ச்சி உண்டாயின் அவற்றை விடாமல் போற்றுவர். அதனால்தான், தெருத் தெருவாகச் சிறப்பற்ற பாட்டுக்கள் முழங்கும் இந்தக் காலத்திலும், தாயுமானவர் பாடல், திருவாசகம், திருவாய்மொழி, சிலப்பதிகாரம் முதியவற்றைப் பாடுவோரின் குரலும் மூலை முடுக்குகளில் கேட்கிறது. | ஆயினும் பெரும்பாலோர் விரும்புவது, பெரும்பாலோர்க்கு கவர்ச்சியானது, ஒலிநயம் என்னும் செல்வம் தான். அது மட்டும் அன்று; இயற்கையோடு இயற்கையாய், உடலுணர்வோடு உணர்வாய் கருத்து வேறுபாட்டுக்கு இடம் இல்லாததாய் விளங்கி வருவது இந்த ஒலிநயம். உணர்ச்சிச் செல்வம் அத்தகையது அன்று; ஒரு புலவர் விரும்புவதை மற்றொரு புலவர் அவ்வளவாக விரும்புவதில்லை; வெறுப்பதும் உண்டு. ஒருவர் தூற்றுவதை மற்றொருவர் போற்றுவதும் உண்டு. புலவர்களின் மன நிலைக்கு ஏற்றவாறு விருப்பு வெறுப்புகள் உண்டு. புலவர்க்குள்ளே இவ்வாறாயின், மற்ற மக்களின் விருப்பு வெறுப்பையும் வேறுபாட்டையும் பற்றிக் கூறவேண்டியதே இல்லை. "வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்" என்ற பாட்டு ஒருவருக்கு இனிக்கும்; வேறொருவருக்குக் கசக்கும். "வாழ்தல் அன்ன காதல், சாதல், அன்ன பிரிவரியோளே" என்ற பாட்டு ஒருவர்க்குத் தீங்கரும்பாகும்; மற்றொருவர்க்கு வேம்பாகும். | உணர்ச்சி வகையில் உள்ள இந்த மாறுபாடு ஒலியின்பத்தில் இல்லை. குழலிசை எல்லோருடைய செவிக்கும் இனிமை பயக்கிறது. குயிலின் குரல் எல்லோர்க்கும் இன்பம் அளிக்கிறது. (பிரிந்து வருந்தும் | | |
|
|