பக்கம் எண் :

114 இலக்கிய ஆராய்ச்சி
 
காதலர்க்குத் துயர் விளைப்பதற்கும் இவற்றின் இனிமையே காரணமாகும்) அருவியின்
முழவோசை எல்லோரையும் மகிழ்விக்கிறது. இசை போலவே இனிய பாட்டொலியும்
பலவகை மக்களையும் கவர்கிறது. குயிலின் இசையும் அருவியின் முழவும் போல்
பாட்டின் ஒலி நயமும் இயற்கையாய் அமைந்து செவிக்கு இன்பம் தருவது. இயற்கைப்
பொருள்கள் புலன்களுக்கு இன்பம் தருவதில் காலத்தாலோ இடத்தாலோ மாறுபாடு
நிகழ்தல் அரிது. செங்குட்டுவன் காலத்தில் காரமாக இருந்த மிளகு இன்று கைப்பாக
மாறவில்லை. மதுரையின் வேப்பங்காய் அங்கு உள்ளவர்க்குக் கைப்பாகவும்
சென்னையில் உள்ளவர்க்கு இனிப்பாகவும் மாறுபட்ட சுவை பயப்பதில்லை. காலம்,
இடம் ஆகியவற்றின் மாறுதலைக் கடந்த ஒரே தன்மையாகச் சுவையுணர்வு விளங்குவது
போலவே, வயது, மனநிலை முதலியவற்றால் வேறுபட்டவர்க்கும் இனிக்கிறது;
கல்லார்க்கும் கற்றவர்க்கும், நல்லார்க்கும் பொல்லார்க்கும், வல்லார்க்கும் மாட்டார்க்கும்
இனிப்பாகவே உள்ளது; எவர்க்கும் கைப்பாக மாறுவதில்லை. செவிச்சுவையும்
அத்தகையதே.
 
     சுவை நுகர்வில் சிலர் நுண்ணிய உணர்வினர். வேறு சிலர் நுண்மை உணராதவர்.
செவிச் சுவையின் நுகர்விலும் இவ்வாறு நுண்ணுணர்வு உடையோரும் இல்லாதோரும்
உண்டு. வேறுபாடு இவ்வளவே அன்றி, இனிப்பது மாறிக் கைப்பதும் இல்லை; கைப்பது
மாறி இனிப்பதும் இல்லை.
 
     ஆகவே, ஒலிநயம் ஒருவகைக் கலைச் செல்வம் என்பது மட்டும் அல்லாமல்,
எக்காலத்திலும் எல்லார்க்கும் இன்பம் தரும் பொதுச் சுவையாகவும் விளங்குவதாகும்.
அவ்வாறு இருந்தும், அது உணர்ச்சிச் செல்வத்திற்கு முன் செல்வாக்கு இழந்து நிற்கிறது;
தன்னுடன் பிறந்த உணர்ச்சிச் செல்வத்தை வாழவைத்துவிட்டுத் தான் குற்றேவல்
செய்கிறது ஏன்?