பக்கம் எண் :

பாட்டின் துறவு 115
 
பாட்டில் அமைந்துள்ள உணர்ந்த உணர்ச்சிச் செல்வத்திற்கும் சீர்தளையிலும்
எதுகைமோனையிலும் அமைந்துள்ள ஒலிநயத்திற்கும் ஒருவகைப் போராட்டம்
ஏற்பட்டது. படிப்படியாக வளர்ந்துவந்த உணர்ச்சிச் செல்வத்தின் கை ஓங்கி நின்றது.
சீர், தளை, எதுகை, மோனை இவற்றை விட உணர்ச்சிச் செல்வம் சிறப்புடையது என்று
போற்றப்பட்ட நிலை அது. பொன்கிண்ணம் வேண்டுமா, நெய்ச்சோறு வேண்டுமா என்று
நெருக்கடி ஏற்பட்ட நிலை அது.
 
     பொன் கிண்ணமும் வேண்டும், நெய்ச் சோறும் வேண்டும் என்று தான் விரும்பத்
தோன்றும். ஆனால் பொன் கிண்ணம் உள்ள இடத்தில் வெறுந் தண்ணீர் தான் உண்டு
என்றும், நெய்ச் சோறு உள்ள இடத்தில் ஆலிலைதான் உண்டு என்றும் நெருக்கடி
ஏற்பட்டால் என்ன செய்வது?
 
     உணர்ச்சிச் செல்வத்தினை ஆக்கி அளிக்கும் உயர்ந்த புலவர்கள் ஒலிநயத்தைத்
தேடி அலையவில்லை; உள்ளத்தைக் கொண்டு மகிழும் மனநிலை பெற்றனர்.
பரிபாட்டையும் கலிப்பாவையும் வண்ணங்களையும் நாடி அலையாமல் எளிய
ஆசிரியப்பாவே போதும் என்று அமைந்தனர். உணர்ச்சிச் செல்வத்தின் எல்லையைக்
கண்டு பெருமனம் பெற்ற பிறகு, ஒலிச் செல்வத்தில் எளிமை மேற்கொண்டனர்;
பாட்டுலகத்தில் டால்ஸ்டாய் ஆயினர்.
 
     ஒரு துறையில் உயர்வை நாடுகின்றவர்கள் அதற்குத் துணையான மற்றொரு
துறையில் இயல்பாகவே எளிமை மேற்கொள்கிறார்கள். ஒரு காலத்தில் கற்கண்டை
அளவு கடந்து தின்ற குழந்தையின் நாக்கு, மற்றொரு காலத்தில் இனிப்புச் சிறிதளவாகக்
கலந்த சிற்றுண்டியை நாடி அமைகிறது. ஒரு காலத்தில் புலிவேடத்தின் ஆரவாரத்தில்