பக்கம் எண் :

116 இலக்கிய ஆராய்ச்சி
 
ஈடுபட்டு மயங்கிய கண், வளர்ந்தமைந்த பின் அம்பலத்தில் ஆடுவோனின் அழகைக்
கண்டு உருகுகின்றது. ஒரு காலத்தில் பறைஒலி கேட்டுத் துள்ளித் துள்ளி ஆடிய
சிறுவனே, பிற்காலத்தில் குழலிசை கேட்டு உருகும் செவிப்புலன் பெறுகிறான்.
அவ்வாறே ஒரு காலத்தில் ஒலிச் செல்வம் மிகுந்த சினிமாப் பாட்டுகளையோ
மற்றவற்றையோ கேட்டு மகிழ்ந்த மனம், பண்பட்டு திருவாசகமே கேட்டு மகிழ்கிறது.
ஆசிரியப்பாவிலோ விருத்தத்திலோ ஒலிநயம் இல்லாமற் போகவில்லை; மிக நுட்பமாக,
சிறிதளவாக அமைந்துள்ளது. இனிய சிற்றுண்டியில் கற்கண்டு இல்லாமற் போயினும்
இனிப்பு இல்லாமற் போகவில்லை; அம்பலத்தில் ஆடும் கூத்தில் ஆடல் அழகு
இல்லாமல் போகவில்லை. குழலிசையில் இசைக் கவர்ச்சி இல்லாமற் போகவில்லை
எல்லாம் மிக நுட்பமாக அமைந்திருக்கின்றன. நுண்மையில் சுவை காண்பதற்குப்
பண்பாடு வேண்டும். அவ்வாறே ஆசிரியப்பா எளிமை உடையதே ஆயினும், ஒலிநயம்
இல்லாதது அன்று; அதன் நுண்ணிய நயத்தைச் சுவைக்கப் பயின்று பண்பட வேண்டும்.
 
     டால்ஸ்டாய் வாழ்ந்த எளிய வாழ்க்கையில் இன்பம் இல்லாமற் போகவில்லை.
அறநெறியிலே உயர்ந்த இன்பம் - தூய இன்பம் - உண்டு என்பதைக் கண்டு
உணர்ந்தவர் அவர். அதனாலேயே செல்வமும் செல்வாக்கும் மிகுந்த வாழ்க்கையை
உதறிவிடும் துணிவு அவருக்கு இருந்தது. ஆசிரியப்பாவையும் விருத்தத்தையும் பெரும்
புலவர்கள் போற்றி உணர்ந்த காரணமும் இத்தகையதே ஆகும். ஷேக்ஸ்பியர் என்னும்
ஆங்கிலக் கவிஞர் ஆசிரியப்பாவைப் போன்ற ஒருவகைச் செய்யுளை (Blank Verse)
எடுத்துக் கையாண்ட காரணமும் இத்தகையதே. இந்தப் பெருமக்களின் குறிக்கோள்
உயர்ந்தது; உயர்ந்த ஒரு குறிக்கோளை நாடியபின், மற்றவற்றில் எளிமையே நாடுவர்.