ஒன்றையே சிறந்த தெனப் போற்றி வேண்டுவர்; மற்றத் துறையில் வேண்டாமையே விழுச்செல்வம் என அமைவர். "வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை; யாண்டும் அஃது ஒப்பது இல்" என்று திருவள்ளுவர் வாழ்க்கையில் கண்டு தெளிந்த உண்மை பாட்டுலகத்திற்கும் பொருந்தியது. தூய உணர்ச்சிச் செல்வத்தை நாடிப் படைக்கும் பெரும் புலவர்கள் ஒலிநயத்தைத் தேடி அலைவதில்லை; கவலை இன்றி இருப்பர்; எளிமை மேற்கொள்வர். அவர்களை நாடி ஒலிநயம் வரும்; வந்த வரையில் வரவேற்பர். அவ்வாறு அமைந்த நூல்களே அகவலிலும் விருத்தத்திலுமாகத் தமிழில் அமைந்துள்ள இலக்கியச் செல்வங்கள். | மனிதன் வேட்டையாடி விலங்குகளைக் கொன்று தின்று குகைகளில் வாழ்ந்த காலத்தில் உருண்டு திரண்ட இரும்பு உடலைக் கொண்டிருந்தான்; ஆனால் அவன் உள்ளம் வளரவில்லை. மனிதன் புத்தரானபோது, ஊன் சுருங்கியது; உள்ளொளி பெருகியது; அந்த எளிமைத் தோற்றத்தின் அழகே உலகைக் கவரும் ஆற்றல் பெற்றது. ஆடற் சிறப்பையும் இசைச் செல்வத்தையும் துறந்து நுண்ணிய எளிய ஒலிநயம் மட்டும் பெற்று உயர்ந்த உணர்ச்சியை வடித்திடும் பாட்டும் இத்தகையதே ஆகும். | | |
|
|