பக்கம் எண் :

எள்ளும் எண்ணெயும் 121
 
என்ற விதியைக் கடந்து செல்லத் திருவள்ளுவர் தயங்கியிருப்பாரானால் இன்று
திருக்குறள் என்னும் உலகப் பொது நூல் தமிழகத்தின் செல்வமாகப் பெற
முடிந்திருக்குமா? தோழி என்பவளைச் செவிலியின் மகளாகவே கொள்ள வேண்டும்
என்ற வரையறையைப் புலவர்கள் போற்றியிருப்பார்களானால், சங்க காலத்து
அகப்பொருட் பாடல்கள் பல பிறந்திருக்க முடியுமா? இளங்கோவடிகளைப் போல்
ஆசிரியப்பாவிலே காவியம் எழுத வேண்டும் என்று திருத்தக்கதேவரும் சேக்கிழாரும்
கம்பரும் எண்ணிக் கட்டுப்பட்டிருப்பார்களானால் இன்று காணப்படுவது போல்
தமிழிலக்கியம் வளமுடையதாக வளர்ந்திருக்க முடியுமா? நாட்டுப் படலம், நகரப்
படலம், ஆற்றுப்படலம் எல்லாவற்றையும் விடாமல் முறையாகப் பாடியாக வேண்டும்
என்று பாரதியார் தம்மைத் தாமே கட்டுப்படுத்திக் கொண்டிருப்பாரானால், காலத்திற்கு
ஏற்றவாறு சிறிய அளவில் உயர்ந்த நூல்களாகக் குயில்பாட்டும் பாஞ்சாலி சபதமும்
தோன்றியிருக்க முடியுமா? (The Literature which really counts.... is the literature which is
made, not out of other literature, but of life; and for a living literature no models will suffice
- Hudson, An Introduction to the study of Literature, P. 132)
 
     இலக்கியம் உயிருள்ளது அன்று; ஆயினும் உயிரின் தன்மையாகிய உணர்ச்சியை
அடிப்படையாகக் கொண்டது. குறிப்பிட்ட அளவுள்ள பொருள்களை எடை போட்டுத்
தகரப் பெட்டிகளில் அடைத்து ஒழுங்குபடுத்துவது போல், உணர்ச்சியை இன்ன
செய்யுளில் இத்தனை செய்யுளில் என்று அடைத்து ஒழுங்கு படுத்தல் முடியாது.