பக்கம் எண் :

122 இலக்கிய ஆராய்ச்சி
 
     பிற்காலத்தில் சிந்து, கண்ணி முதலியவை வளர்ந்தது போல், இடைக் காலத்தில்
விருத்தம் என்னும் செய்யுள் வகை வளர்ந்து செல்வாக்குப் பெற்ற காரணத்தை
ஆராய்ந்தால், இந்த உண்மை விளங்கும். விருத்தம் தோன்றுவதற்கு முன் தமிழ்நாட்டில்
செல்வாக்குப் பெற்றிருந்த செய்யுள் ஆசிரியப்பா என்னும் அகவலே. அப்போது
பாரதமும் இராமகாதையும் ஆசிரியப்பாவால் பாடப்பட்டிருந்தன. அவ்வளவு
செல்வாக்குப் பெற்றிருந்த ஆசிரியப்பாவும் விருத்தம் வந்த பிறகு தன் செல்வாக்கை
இழந்தது. அத்தகைய ஆசிரியப்பா செல்வாக்குடன் வாழ்ந்த காலத்தில் அது இவ்வாறே
மற்றச் செய்யுள் வகைகளை வென்று வாழ்ந்திருந்தது. கலிப்பாவும் வஞ்சிப்பாவும்
பரிபாடலும் பழங்காலத்துச் செய்யுள் வகைகள். கலிப்பாவும் பரிபாடலும்
தொல்காப்பியனாரால் புலனெறி வழக்கத்திற்குச் சிறந்தனவாகப் போற்றிக்
கூறப்பட்டுள்ளன. ஆயினும் எட்டுத்தொகை நூல்களுள் கலிப்பாவால் ஆகிய தொகை
நூல் (கலித்தொகை) ஒன்றே உள்ளது; பரிபாட்டால் ஆகிய தொகை நூலும் (பரிபாடல்)
ஒன்றே உள்ளது; அந்நூலிலும் பெரும்பான்மையான பாடல்கள் மறைந்தழிந்தன. மற்ற
ஆறு தொகைகளும் ஆசிரியப்பாவால் ஆகிய செய்யுட்களைக் கொண்டவை. வெண்பா
முதலான செய்யுள் வகைகளைவிட ஆசிரியப்பா அக்காலத்தில் பெற்றிருந்த இத்தகைய
செல்வாக்கிற்குக் காரணம் என்ன? பிற்கால இடைக்கால மாறுதல்களுக்குக் காரணம்
எதுவோ, அதுவே அதற்குக் காரணமாகும். தளை, அடி வரையறை, ஓசை வரையறை,
வரையறுத்த தொடக்கம், வரையறுத்த முடிவு முதலான கட்டுப்பாடுகள் மற்றச்
செய்யுட்களில் மிகுதி; ஆசிரியத்தில் குறைவு. வெண்பாவில் இன்ன சீர்க்குமுன் இன்ன
சீரே வரவேண்டும் என்ற அமைப்பு உண்டு. கலிப்பாவில் தரவு இவ்வாறு அமைந்து