தொடங்க வேண்டும். தாழிசைகள் இத்தனை இவ்வாறு வரவேண்டும். தனிச் சொல்லும் சுரிதகமும் இவ்வாறு முடிய வேண்டும் என்ற வரையறை எல்லாம் உண்டு. ஆசிரியப்பாவில் இத்தகைய கட்டுப்பாடுகள் இல்லை. இவ்வாறு கட்டுப்பாடு குறைந்து உரிமை மிகுந்துள்ள காரணத்தால் சங்க காலப் புலவர்கள் தம் தம் உணர்ச்சிக்கு வடிவு தருவதற்கு அதனைப் போற்றி மேற்கொண்டார்கள். ஒரே வகையான நடையும் ஓசையும் உடைய ஆசிரியப்பாவில் வெவ்வேறு வகையான உணர்ச்சிகளை அமைப்பதில் எவ்வளவோ தடை உண்டு என்பதை இடைக்காலப் புலவர்கள் உணர்ந்தார்கள்; விருத்தம் என்பது வெவ்வேறு வகை நடையும் வகை வகையான ஓசையும் அமைந்து மாறி மாறி வரக்கூடியதாக இருத்தலைக் கண்டு, அதைப் போற்றத் தொடங்கினார்கள். இவ்வாறே மற்ற மாறுதல்களும் ஏற்பட்டன. |
காலத்திற்கு ஏற்ப மக்களின் மனம் வளர்ந்து வருவதும் இதற்குக் காரணமாகும். அடிப்படை உணர்ச்சிகள் வாழ்க்கையில் என்றும் ஒரே நிலையாக இருப்பினும் அவற்றை ஒட்டிய மற்ற உணர்ச்சிகள் சிறு சிறு வேறுபாடுகள் அடைந்தே வருகின்றன. அவற்றை உணரும் முறைகளும் உணர்த்தும் முறைகளும் வேறுபட்டு வருகின்றன. ஆகையால் அவற்றிற்கு ஏற்ப இலக்கியத்தின் வடிவங்களும் மாறி வருதலே இயற்கை. |
ஓர் ஊரில் ஆற்றங்கரையில் ஒரு தென்னந்தோப்பு ஒரு வகையாக வளர்க்கலாம். அதைக் கண்ட வேற்றூரான் அது போன்ற ஒரு தோப்பைத் தன் ஊரில் வைக்க முயலலாம். ஆனால், அது தென்னந்தோப்பாக இருக்கின்றதா என்பதை மட்டும் அவன் கவனித்தால் போதும். வெளியூரில் கண்ட தோப்பின் அகலமும் நீளமும் |