அவற்றின் விகற்பங்களையும் வடமொழி இலக்கணம் விரிவாகக் கூறுகிறது. அந்தப் பகுதியைத் தொல்காப்பியனாரும் மெய்ப்பாட்டியலில் விளக்கியுள்ளார். மொழி பெயர்த்தவர்கள் அந்தப் பகுதியைச் சுட்டிக்காட்டும் அளவில் குறுகிநின்றனர். அணிகளைப் பகுத்துப் பெயரிடும் (சிறப்பில்லாப்) பகுதியில் ஆர்வம் கொண்டு தொண்டு செய்தனர். ஆதலின் அவர்கள் ஆற்றிய தொண்டு, தமிழிலக்கிய வளர்ச்சிக்குத் துணை செய்யவில்லை. இடையூறாகவே நின்றது. (வினாத் தாள்களில் 'இது என்ன அணி? விளக்குக' என்று அழகான முறையில் கேள்வி கேட்கப் பயன்படுவது தவிர, வேறு பயன் காணோம். அதனால், பாட்டுக் கலையில் மாணவர்க்குச் சுவை தோன்றாதவாறு செய்து வெறுப்பு வளர இடமாயிற்று.) | வடமொழி இலக்கியத்திலும் அணிகளைப் பகுத்துப் பெயர் வைக்கும் போலிப் புலமை போற்றப்பட்ட காலம் ஒன்று இருந்தது. காமுகரான ஒருவனும் ஒருத்தியும் வாழும் வாழ்வில் உள்ள பேச்சுக்களையும் நிகழ்ச்சிகளையும் இழிவான முறையில் எடுத்துக் கூறிச் செய்யுள் இயற்றுவோர் சிலர் தோன்றினர். ஒவ்வோர் அணிக்கு ஒவ்வோர் எடுத்துக்காட்டு வேண்டுமே என்று இலக்கணப் புலவரும் அத்தகைய செய்யுட்களை இயற்றிச் சுவைக்கத் தொடங்கினர். அந்தச் செய்யுட்களின் பொருளைத் தெருவில் செல்வோர்க்கு எடுத்துச் சொன்னால், அவர்களும் வெறுத்துச் செல்வர். அத்தகைய இழிந்த செய்யுட்கள் தோன்றுவதற்கு அணியிலக்கணம் ஓரளவு துணை செய்தது. இன்று தண்டியலங்காரத்தில் எடுத்துக்காட்டாக வரும் ஒரு சில செய்யுட்கள் நாகரிகமான முறையில் சொல்ல முடியாதனவாக உள்ளன. எடுத்துச் சொல்லப் புகுந்ததால், நல்லுணர்வுடைய மக்கள் கேட்கக் கூசும் பொருள்கள் அவற்றில் உள்ளன. | | |
|
|