அவற்றோடு நிற்கவில்லை அந்த இழிமுறை. அணி இலக்கணத்தைப் போற்றிக் கற்ற புலவர் சிலர், உயர்ந்த இலக்கிய உணர்வால் பண்பட முடியாமல் கீழ் நிலையிலேயே தேங்கி நின்றனர். அவர் கலம்பகமும் உலாவும் தனிப் பாடல்களும் பாடியபோது, அந்த இழிந்த நிலையில் நின்று சில பல செய்யுட்களை இயற்றி விட்டனர். நல்ல காலமாக தமிழிலக்கியத்தில் அந்த மாசு நிலைக்கவில்லை. அத்தகைய நூல்கள் பல அழிந்துவிட்டன. சில இன்னும் ஏட்டுச் சுவடிகளாகவே ஏங்கி நிற்கின்றன. தமிழுலகம் தம்மை வரவேற்காது என்பதை உணர்ந்தே அந்தப் போலிப் பாட்டுக்கள் அவ்வாறு ஏங்கி வாடுகின்றன. | அவற்றைப் பாடிய புலவர்கள் ஓர் உண்மையை மறந்து விட்டனர். பாட்டில் மிளிர வேண்டியது புலவருடைய கற்பனை உணர்வே, உணர்ந்தவாறு கற்பனை உணர்வை வெளிப்படுத்தின் ஒலிநயமும் பொருள் நயமும் தாமாகவே அமைந்துவிடும். அவ்வாறு அல்லாமல், ஒலி நயத்தையும் பொருள் நயத்தையும் தேடிச் சுமத்துவோர், உணர்வின் தூண்டுதலால் பாட்டு எழுதும் உண்மைப் புலவர் அல்லர் என்றே கூறவேண்டும். சவலையாகி வாடி மெலிந்த குழந்தைக்குத் தாங்க முடியாத நகைகளைப் பூட்டி அழகு பார்க்கும் அறிவற்ற தாயைப் போன்றவர்களே அவர்கள். குழந்தைக்குப் பசி அறிந்து பாலூட்டி வளர்ப்பதும் நீராட்டிச் சீர்படுத்துவதுமே தாயின் கடமை. அவ்வாறு அதன் உடலில் உரமும் தூய்மையும் குடிகொள்ளச் செய்துவிட்டால் அது போதும். அதன் கருவிழிகளில் தானாகவே ஒருவகை ஒளி விளங்கும்! அதன் கலைந்த தலைமயிரில் இயல்பாகவே ஒரு தனி எழில் விளங்கும்! அதன் புன்முறுவலில் தானாகவே கவின் பொழியும்! அதன் மழலை மொழியில் இயல்பாகவே யாழும் குழலும் இசைக்கும்! இவ்வாறு குழந்தை அழகாக விளங்கச் | | |
|
|