பக்கம் எண் :

134 இலக்கிய ஆராய்ச்சி
 
செய்து, குறித்த அளவான இலைகளையும், காகிதத்தால் செய்து அவற்றிற்குப் பச்சை
நிறம் ஊட்டுகிறார். பிறகு, காகிதத்தாலேயே அரும்புகளையும் பூக்களையும் அளவின்படி
செய்து, அந்த நூலில் குறித்த நிறங்களையும் தீட்டி அந்தந்த மலருக்கு உரிய
மணங்களையும் ஊட்டுகிறார். இவ்வாறே செயற்கைப் பூந்தோட்டம் ஒன்று வைத்துத் தம்
வீட்டுக் கூடத்தை அழகுபடுத்துகிறார். என்ன பாடுபட்டாலும், அவருடைய உழைப்பு
வீண் உழைப்புத் தானே! அவரைத் திறமை உடையவர் என்று போற்றலாம்! ஆனால்,
அவருடைய காகிதப் படைப்பைப் பூந்தோட்டம் என்று போற்ற இடம் உண்டோ?
அணியிலக்கணம் படித்துத் தேர்ந்து, அதுவே புலமைக்கு வழி என்று நம்பி மயங்கியவர்
இயற்றும் செய்யுட்களின் வாழ்வும் அப்படிப்பட்டதுதான்!