பேராற்றிற்கு, அறிவின் வளர்ச்சிக்கு, இந்த உணர்ச்சிக் கானாறு இன்றியமையாதது என்பது அவர்களுக்குத் தெரியும். ஆயினும், அதற்குரிய இடம் வேறு என்று தெளிந்து ஒதுங்கிக் கடமையைச் செய்ய முனைகின்றார்கள். | உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவு, ஆற்றல் மிகுந்த கலையாகும். நாட்டு மக்களை உடனடியாகத் தூண்டிவிட, நாட்டில் எதிர்பாராதவற்றை நடத்திவிட, அந்தக் கலைக்கு ஆற்றல் உண்டு. அந்த ஆற்றல் நன்மைக்கே பயன்படும் என்று வரையறுக்க வழி இல்லை. அதனால் தான் பொறுப்புள்ளவர்கள் அந்தக் கலையிலிருந்து உணர்ச்சிப் பகுதியைக் குறைக்க வழி தேடினார்கள். | அதற்கு அடுத்தபடியாக ஆற்றல் வாய்ந்த கலை நாடகக் கலை. சிறந்த சொற்பொழிவைக் கேட்போர் உணர்ச்சி மயமாக விளங்க முடிவது போலவே, சிறந்த நாடகத்தைக் காண்போரும் தம்மை மறந்து, அழவும் சிரிக்கவும் முடியும். ஓவியம், சிற்பம் முதலான கலைகளுக்கு இவ்வளவு ஆற்றல் இல்லை. கலைகள் எல்லாம் உணர்ச்சியை அடிப்படையாகக் கொண்டு அமைந்தவைகளே! ஆயினும் அவற்றுள் சிலவற்றிற்கு ஆற்றல் குறைந்திருக்கக் காரணம் என்ன? உணர்ச்சி புலப்படுவதற்கு வாயிலாக உள்ள கருவிகளின் சிறப்பே காரணமாகும். சொற்பொழிவிலும் நாடகத்திலும் உணர்ச்சிக் கருவிகளாக உள்ளவை சொற்களும் குரலும் முகக் குறிப்பும் கையசைவும் முதலியவை. இவை வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு உள்ளவை. ஆகையால் கேட்போரையும் காண்போரையும் உடனே சென்று சார்ந்து இயங்குகின்றன. ஆனால், ஓவியம், சிற்பம் என்னும் கலைகளில் கோடும் நிறமும் மண்ணும் கல்லும் முதலியவை கருவிகளாக உள்ளன; இவை வாழ்க்கையோடு நெருங்கிய தொடர்பு இல்லாதவை. | | |
|
|