பக்கம் எண் :

142 இலக்கிய ஆராய்ச்சி
 
அப்படியாவது அந்தச் சடங்குப் பாட்டு இன்றியமையாததாக இருந்தாலும் கவலை
இல்லை. அதுவும் காணோம். கூலிக்கு அல்லது பேருக்கு எழுதும் திருமண வாழ்த்தும்
பாராட்டு இதழும் கையறு நிலையும் செய்யுள் வடிவாக இருக்க வேண்டிய
இன்றியமையாமை இல்லை; உரைநடையில் அமைக்கலாம். அதிலும், எவருடைய
திருமணத்தைப் பற்றியோ தொடர்பில்லாத புலவர் ஒருவர் உணர்ச்சி இல்லாமல்
வாழ்த்துச் செய்யுள் பாடித் தருவதும், யாரோ இறந்ததற்காக அவரைப் பற்றி ஒன்றுமே
அறியாத ஒருவர் கையறு நிலைபாடித் தருவதும் சடங்கு என்று கூறுவதும் தகுதியற்ற
செயல்கள்.
 
     ஆகையால், எழுதிப் படிக்கும் சடங்குச் செய்யுளுக்கு உலகத்தில் இடம் இல்லை.
எழுதிப் படிக்கும் பேச்ச அறிவுலகத்தில் இடம் பெற்றது போல், இது இடம் பெறல்
இயலாது. இந்தச் சடங்குச் செய்யுள் அறிவுலகத்தில் அடிவைத்தல் இயலாது; உணர்ச்சி
உலகத்திலோ, இதற்குத் தொடர்பு இல்லை.