செய்வதில்லை. எண்ணங்களைச் சொல்வடிவாக எண்ணுகிறாள்; சொற்களைக் கை தானாகவே எழுதிவிடுகிறது. |
வளர்ந்து பயின்ற பிறகு எழுதும்போது தயக்கமோ முயற்சியோ நேர்ந்தால், கையில் ஏதேனும் புண்பட்டு வலிப்பாக இருக்கலாம்; அல்லது முதுமை காரணமான நடுக்கமாக இருக்கலாம். |
இலக்கணக் கல்வியும் அப்படித்தான். நல்ல எழுத்தாள னாகின்றவன் முதல் முதலில் இலக்கண விதிகளை முயன்று கற்றுத் தேர்கிறான்; அந்த விதிகளை நினைவில் கொண்டு பிழை நேராமல் காத்துக்கொண்டு எழுத முயல்கின்றான். இந்தத் துறையில் பழகிய பிறகு சில ஆண்டுகள் கழித்தபின், கட்டுரையோ கதையோ எழுதும்போது அவன் இலக்கண விதிகளை நினைப்பது இல்லை; பிழையில்லாமல் எழுதுவது அவனுக்கு இயற்கையாகி விடுகின்றது. அவன் எழுதுவன எவையும் பிழையற்றவை, எதிர்கால இலக்கணத்திற்கு இலக்கியமாகக் கொள்ளத் தக்கவை என்று போற்றப்படும் நிலைமை அடைகிறான். |
கற்றுத் தேர்ந்த ஒருவன் கட்டுரையோ கதையோ எழுதும்போது தயங்குவானானால், அவன் கற்ற இலக்கணத்தில் ஏதேனும் குறை இருக்க வேண்டும்; அதனால் தான் அவனுடைய மூளையோடு இயற்கையாக ஒன்றுபடாமல் அந்த இலக்கணம் விலகி நிற்கிறது. அல்லது, எழுதுவதற்கு வேண்டிய கருத்துக் குறைந்த நிலைமையாக இருக்க வேண்டும். |
எடுத்து அடிவைக்கும் பயிற்சி இயற்கையாக அமைவது போல், வளைந்தும் நீட்டியும் எழுத்துக்களை எழுதும் திறமை இயற்கையாகிவிடுவது போல், சொற்களையும் சொற்றொடர்களையும் மொழிமுறைப்படி, இலக்கணப்படி, அமைத்து எழுதும் புலமையும் இயற்கையாக அமையவேண்டும். |