இந்தத் துறையை அடியோடு துறந்து வேறொரு துறையை மேற்கொள்வதே நல்லது. பல நூற்றாண்டுகளாகக் கலைச் செல்வத்தில் சிறந்து பண்பட்ட தமிழகம் இதை ஒரு பழமொழியாகவே ஆக்கிவிட்டது "காரிகை கற்றுக் கவிபாடுவதினும் பேரிகை கொட்டிப் பிழைப்பது நன்றே" என்பது கலையுலகிற்குத் தமிழ்நாடு தரும் அறிவுரை. நடக்க வேண்டும் என்று எண்ணியவுடனே நம்மை அறியாமல் கால்கள் மாறி மாறி இயங்குவது போல், உள்ளத்தில் உண்மையொளி வீசியவுடனே வாக்கினிலே கலையொளி பிறக்க வேண்டும்; உணர்ச்சி தூண்ட எழுதுகோலை எடுத்தவுடன், எதுகை, மோனை முதலியன தாமாக வந்து அமைந்திட வேண்டும்; இதுவே கவிஞன் நிலைமை. |
எதுகை, மோனை முதலியவற்றை நாடித் தயங்காமை போலவே, கலைப் பயனையும் நாடித் தயங்காமல் பாடுகின்றவனே சிறந்த கலைஞன். கற்பனையுள்ளத்துடன் உணரும் உணர்வு கலைவடிவமாக அமையாதவனே, எழுதும்போது தனியே கலை வளத்தை நாடி நிற்பான். |
கற்பனையின் அடிப்படையிலேயே உணர்வின் எழுச்சியிலேயே கலை வாழாவிட்டால், அதன் புறத்தே அதைத் தேடியும் பயன் இல்லை. இன்பத்தைத் தேடி அலைகின்றவன் இன்பத்தை அடையாதது போல், கலைப்பயனை மட்டும் நாடுகின்றவனும் அதைப் பெறாமல் ஏங்குகிறான் என்று ஜே.ஸி.ஷார்ப் என்னும் அறிஞர் கூறியுள்ளார். சிறந்த கலைவளத்தைப் பெற வழி அதை மறந்து அப்பால் உள்ள உண்மையை நாடுவதே ஆகும் என்றும் அவர் தெளிவாக்கியுள்ளார். ஆகவே, |
| உள்ளத்தில் உண்மையொளி உண்டாயின் வாக்கினிலே ஒளிஉண் டாகும் |
என்ற பாரதியார் போற்றிய அந்த உள்ளத்தின் ஒளியை நாடுவதே உயர்ந்த கலைஞனுக்கும் கடமையாகின்றது. |