பக்கம் எண் :

  20. விட முடியாதது
 
     கிரேக்க நாட்டின் பண்டைய அறிஞர் பிளாட்டோ (Plato) என்பவர்
கவிஞர்களுக்குச் சிறப்புத் தராதவர். அவருடைய அரசியலில் கவிஞர்கள்
புறக்கணிக்கப்படுகிறார்கள். அவரைப்போல் கருதும் அரசியல் அறிஞர்கள் இந்த
நூற்றாண்டிலும் இல்லாமற் போகவில்லை. இங்கிலாந்தின் அரசியல் வல்லுநரான
பெவிரிட்ஜ் (Beveridge) என்பவரும் அவ்வாறே கவிஞர்களைப் புறக்கணித்துத் திட்டம்
வகுத்தார். அரசியலில் புகழ்பெற்ற அறிஞர்களாகிய இவர்கள் பாட்டுக் கலையையும்
அதன் கலைஞர்களையும் இவ்வளவு வெறுத்து ஒதுக்கக் காரணம் என்ன?
 
     இந்த அறிஞர்களின் ஆர்வம் எல்லாம் அரசியலையே முதல் நோக்கமாக -
குறிக்கோளாகக் கொண்டது. வாழ்க்கையை எவ்வாறேனும் சீர்ப்படுத்தி நாட்டின்
அமைதியைக் காத்து மக்களை முன்னேற்ற வேண்டும் என்று ஆராய்ந்தவர்கள்
இவர்கள். இவ்வாறு உயர்ந்த நோக்கம் கொண்டு பொது நலம் கருதி இவர்கள் திட்டம்
வகுத்தபோது, குறிக்கோளுக்கு இடையூறாக உள்ள எதையும் பொருட்படுத்தாமல்
விட்டனர். உலகம் எல்லாம் போற்றிப் பாராட்டும் கவிஞர்களே ஆனாலும், அவர்கள்
அரசியல் முன்னேற்றத்திற்கு இடையூறாக இருந்தால் ஒதுக்கப்பட வேண்டியவர்களே
என்று இவர்கள் துணிவு கொண்டார்கள்.