பக்கம் எண் :

150 இலக்கிய ஆராய்ச்சி
 
நிலைமை உணராதது; ஆய்ந்தோய்ந்து பாராதது; பற்றிய ஒன்றையே போற்றி மற்றதை
மறப்பது. ஆகையால் குணம் நாடிக் குற்றமும் நாடும் பெற்றியைப் பாட்டுக் கலையால்
பெற முடியாது. புலவர் ஊட்டும் உணர்ச்சியைப் பெற்று அவர் கண்டவாறு காணவே
பாட்டுக் கலை துணை செய்யும். பாடிய புலவர் நல்லவராய், நேர்மையானவராய்
இருப்பின். அவருடைய பாட்டைப் படிப்பவரும் நல்ல உணர்ச்சியை நேரிய முறையில்
பெற முடியும். ஆயின், பாடிய புலவர் நடு நிலைமை அற்றவராய் ஒன்றைப் பற்றுடன்
பாடியிருப்பின் அதைப் படிப்பவர் திருந்த முடியாதவராக மாறிவிடுவர். ஆகவே,
நன்மையையும் தீமையையும் ஆற்றலுடன் வளர்க்கவல்லது பாட்டுக் கலை. ஆனால்,
மக்களின் சமுதாய வாழ்க்கையும் அரசியல் வாழ்க்கையும் வேறு வகையானவை; அவை
நடுநிலையான நோக்கையும் அறிவான ஆராய்ச்சியையும் அடிப்படையாகக் கொண்டவை.
மக்களின் பொது வாழ்க்கைக்குத் தீமை விளைவிக்க வல்ல எதையும் களைந்தெறிய
வேண்டும் என்பதே அரசியல் அறிஞர்களின் கொள்கை. இதைப் பிளாட்டோ முதலிய
ஒரு சிலர் அஞ்சாமல் வெளியிட்டுள்ளனர். மற்ற அறிஞர்களோ, புலவர் செல்வாக்கைக்
கண்டு அஞ்சி அடங்கிக், கூறாமல் விடுகின்றனர்; ஆயினும் நெருக்கடி நேரும்போது
அரசியல் தலைமைக்கு இடையூறு நேரும் போது, தம்மைப் போற்றும் புலவர்களுக்கு
மட்டும் இடம் கொடுத்து, தூற்றும் புலவர்களுக்குத் தடை யுத்தரவுகள் பிறப்பிக்கின்றனர்.
அது ஒரு வகையில் பாட்டுக் கலையை - அதன் ஒரு பகுதியை - வெளியேற்றும்
முயற்சியே அன்றோ?
 
     தடுக்கப்பட்ட பாட்டுக்கள் தீய நோக்கம் உடையவை என்று அந்த அறிஞர்கள்
குற்றம் கூறலாம். ஆனால் பாடிய புலவர்கள் தம் நோக்கம் சீரானது என்று கருதுவதே
இயல்பு. தம் உணர்ச்சிக்குக் கலைவடிவம் தரும் உரிமை