பக்கம் எண் :

விட முடியாதது 151
 
அவர்களுக்கும் உண்டு. ஆகவே, அந்தத் தடை கலைக்குப் பிறந்த தடை என்பது
உண்மையே ஆகும்.
 
     கலை என்பது 'பிரச்சார நோக்கம் இல்லாததாக இருக்க வேண்டும்' என்று ஒரு
காரணம் கூறலாம். கலைகளின் வரலாற்றை ஆராய்ந்தால் பெரும்பாலானவை அந்தந்தக்
காலத்திற்கு உரிய பிரசாரத்திற்காகவே தோன்றியிருப்பதை உணரலாம். ஒரு காலத்தில்
தடுக்கப்பட்ட பாரதியார் பாடல்களும் அப்படிப்பட்டவைகளே. தாம் உணர்ந்ததை
மற்றவர்க்கு உணர்த்த வேண்டும் என்பதே கலைக்குத் தூண்டுகோலாக இருப்பதால்,
பிரச்சாரப் போக்குப் பற்றிக் கலையைக் குறைகூற முடியாது. இவ்வாறு குறை
கூறுகின்றவர்கள், தமக்குச் சார்பான கொள்கைகளைப் பரப்பும் கலைத்துறையை மட்டும்
தாம் களிப்போடு போற்றுவதை எண்ணிப் பார்க்க வேண்டும். தன்னைப் புகழ்கின்றவன்
மெய்யன் நேர்மையானவன் என்றும், பிறனைப் புகழ்கின்றவன் பொய்யன்
நேர்மையற்றவன் என்றும் சொல்வது தகுமோ?
 
     மற்றோர் உண்மையையும் எண்ணிப் பார்க்க வேண்டும். அறிவு வளர வளர
உணர்ச்சி பயன்படுகிறது; நுட்பம் அடைகிறது; ஆனால் ஆற்றலும் வேகமும் இழக்கிறது;
அறிவு குறைந்த நிலையில்தான் உணர்ச்சி, ஆற்றலும் வேகமும் உடையதாய்
விளங்குகிறது. ஆகையால், உயர்ந்த மக்கள் பாடிய விழுமிய பாட்டுகள், பண்பட்ட
நெஞ்சினர் சிலர்க்குப் பயன்படுமே தவிர, பெரும்பாலான மக்களுக்குப்
பயன்படுவதில்லை. அவர்கள் விரும்புவன எல்லாம் இழிந்த பாட்டுக்கள், நெறி தவறிய
பாட்டுக்கள் பண்படாத கருத்துடைய பாட்டுக்களே ஆகும். ஆகவே பாட்டுக் கலை
உலகத்திற்கு ஆற்றியுள்ள நன்மை பெரிதா. தீமை பெரிதா என்பதை
அளந்தறிந்தால்தான் உண்மை விளங்கும்.