ஆதலின் பிளாட்டோவும் மற்றவர்களும் கூறுவது கண்மூடிக் குற்றச்சாட்டு அன்று என்று உணரவேண்டும். அதே நிலையில், பாட்டுக் கலை தீமையே பயக்கும் என்று நம்பிவிடலாகாது; அது தீமையும் பயக்க வல்லது என்று அறிய வேண்டும். அறிந்த பின் தீமை விளைக்காத படி தூய்மைப்படுத்த வழி காண வேண்டும். அதுவே கடமை. | தூய்மைப்படுத்த வேண்டும் என்றதும், பாட்டுக் கலையில் ஏதோ மாசு இருப்பதாக எண்ணுதலாகாது. பாட்டைப் படைப்பவரின் உள்ளத்திலும் மாசு இல்லாதவாறு தூய்மைப்படுத்துவதே கடமையாகும், ஆகவே, பாடும் புலவரும் படிக்கும் மக்களும் நல்ல மனம் உடையவர்களாக விளங்கத் தக்கவாறு அரசியலும் சமுதாயமும் திருந்தி அமைய வேண்டும்; அரசியலும் சமுதாயமும் அறநெறியை அடிப்படையாகக் கொண்டு விளங்க வேண்டும்; பொருள்வேட்கையும் புகழ்வெறியும் இல்லாத நன்னிலையை அடைய வேண்டும். | பிளாட்டோ போல் திருவள்ளுவர் எண்ணிப் பார்த்தாரோ இல்லையோ, அறிய முடியவில்லை. ஆனால், அவர் அரசியல்நெறி வகுத்துக் கூறியபோது, நல்ல மனம் இல்லாத மக்களை என்ன செய்வது என்று வருந்தியிருக்கிறார் என்பது மட்டும் தெளிவு. அதனால் தான், | | பலநல்ல கற்றக் கடைத்தும் மனம்நல்லர் ஆகுதல் மாணார்க்கு அரிது. | (திரு. 823) | என்றார். ஆகவே, மாண்பில்லாத கயவர் அருகி, மாண்புடைய மக்கள் பெருகினால் தான் அரசியலும் திருந்தும், பாட்டுக் கலையும் பயன்படும். அதற்கு அறநெறி தவிர வேறு வழியும் உண்டோ? | | |
|
|