பக்கம் எண் :

விட முடியாதது 153
 
     பால், வெங்காயம் முதலியவை சத்துள்ள உணவாக அமைவன. ஆயினும்
அவற்றைச் சிலர் வெறுத்து ஒதுக்கக் காண்கின்றோம். காரணம் என்ன? அவை
நரம்புகளுக்கும் தசைகளுக்கும் உரம் ஊட்டிக் கிளர்ச்சியும் தருவனவாக உள்ளன.
அதனால் அவற்றை அவர்கள் வெறுத்து நீக்குகிறார்கள்.
 
     பாட்டுக் கலை உள்ளத்திற்கு உரம் ஊட்டிக் கிளர்ச்சி தருவது, அதனால்
ஒழுக்கத்துடன் வாழ முடியாமல் சிலர் கெடுகிறார்கள். அதைக் கண்ட அறிஞர் ஒரு
சிலர், அது சமுதாய அரசியல் வாழ்வுகளுக்கு வேண்டாத கலை என்ற கருத்துக்
கொள்கின்றனர். பிளாட்டோவும் பெவிரிட்ஜு ம் கொண்ட கொள்கைகளுக்கும்
அடிப்படை இதுவே ஆகும்.
 
     பால், வெங்காயம் முதலிய சத்துணவுகளால் ஒரு தீமையும் இல்லை என்று
கூறிவிடமுடியாது. கலைஞன் பெருங்கலைஞன் ஆவதற்கும், காமுகன் பொல்லாத விபசாரி
ஆவதற்கும் அவை துணை செய்யும். ஆனால், அந்த உணவுகள் செய்யும் நன்மையை
மறத்தலாகாது. குழந்தைகளின் வளர்ச்சிக்கும் சிறுவர்களின் சுறு சுறுப்புக்கும் அவை
காரணம் அல்லவா? எத்தனை சான்றோர்களின் நல்வாழ்வுக்கு அவை உதவி செய்தன.
இவற்றை எல்லாம் மறந்து விடலாகாது.
 
     பாட்டுக் கலையும் இப்படிப்பட்டதே, பாட்டு ஊட்டிய உணர்ச்சி வெறியால், சமயத்
துறையில் எத்தனையோ பிணக்கும் பூசலும் கொலையும் மக்களிடையே நிகழ்ந்து
இருக்கலாம். கட்சி வெறியோ, நாட்டு வெறியோ ஊட்டிய உணர்ச்சிப் பாட்டுக்களால்
எத்தனையோ புரட்சிகளும் போர்களும் அழிவுகளும் நடத்திருக்கலாம். சமுதாயப் பழக்க
வழக்கங்களில் அறியாமைக்கும் மூட நம்பிக்கைக்கும் வாழ்வளிக்கும் உணர்ச்சியை
எத்தனையோ பாட்டுக்கள் வளர்த்திருக்கலாம். உண்மையைக் காண முடியாமல்,