பக்கம் எண் :

154 இலக்கிய ஆராய்ச்சி
 
நடுநிலையில் ஒழுக முடியாமல், ஒரு சார்பாக உணர்ந்து நெறி பிறழுமாறு எத்தனையோ
மக்களின் அறிவுக்கண்ணைப் பாட்டுக்கள் கெடுத்துக் குருடாக்கி இருக்கலாம். ஆயினும்,
பாட்டுக் கலையால் உலகம் இன்றுவரை பெற்றுவந்துள்ள நன்மைகளை மறப்பது
தகுமோ? இன்று வரையில் வளர்ந்துள்ள நாகரிகத்தின் வளர்ச்சிக்குப் பாட்டுக்கலை ஒரு
சிறந்த காரணமாக இருந்துவந்தது என்பதையும் மறக்க முடியுமா? பலவகைத்
தொல்லைகளால் தளர்ந்து வாடி மடியும் எத்தனையோ உள்ளங்களுக்குப் புத்துணர்வு
கொடுத்து நடைப் பிணங்களை நல்லுயிர்களாய் வாழச் செய்துவரும் பாட்டுக் கலையின்
அரிய உதவியைப் பாராட்டாமல் புறக்கணிக்க முடியுமோ?
 
     பல கல் தொலைவு நடந்து பிறருக்குத் தொண்டு செய்ய உதவுவது கால்; கால்
பக்கத்திலிருப்பவரையோ பெற்ற தாயையோ எட்டி உதைக்கவும் கூடும்; அது காலின்
குற்றமா? பசியாலும் தாகத்தாலும் வருந்துவோர் பலர்க்குச் சோறும் நீரும் கொடுத்துக்
காப்பது கை; அந்தக் கை, கொலைக் கருவியை எடுத்துக் கொடுஞ்செயல் செய்வதும்
உண்டு. அது கையின் குற்றமா? அற நூல்களும் சட்டங்களும் பிறந்த உலகம்
காக்கப்படுவதற்கு எழுத்து ஒரு கருவியாகப் பயன்படுகிறது; பொய்யும் போலியும் பெருகி
ஏமாற்றமும் வஞ்சமும் வளர்வதற்கும் அது கருவியாக இருக்கிறது. அது கையெழுத்தின்
குற்றமா? எல்லாம் மனம் திருந்தாத மக்களின் குற்றமே ஆகும். பாட்டுக் கலையால்
 உலகில் விளைந்த தீமைகளும் அவ்வாறே பாட்டின் குற்றமாகாமல், அதைப்
பயன்படுத்தும் மக்களின் குற்றமே ஆகும்.
 
     நன்மையை மட்டும் பிரித்தெடுத்துத் தீமையைக் கை விட்டுப் பாட்டுக் கலையைப்
பயன்படுத்த முடியும். அதற்கு