பக்கம் எண் :

156 இலக்கிய ஆராய்ச்சி
 
முதற்பொருள் வேண்டும். சிற்பக் கலைக்கு மண்ணோ, மரமோ, கல்லோ, இரும்போ,
வேறு பொருள்களோ வேண்டும். ஓவியக் கலைக்கு வண்ணங்களும் மற்றப்
பொருள்களும் வேண்டும். இவ்வாறு மற்றக் கலைகளுக்கும் வேறு வேறு பொருள்கள்
வேண்டும். இந்த முதற் பொருள்களுக்கும் வாழ்க்கைக்கும் என்ன தொடர்பு? கல்,
இரும்பு, வண்ணம் முதலியவற்றோடு வாழ்க்கை நெருங்கிய தொடர்பு கொள்ளவில்லை.
ஆனால் பாட்டுக் கலையின் முதற்பொருள் வாழ்க்கையோடு ஒன்றுபட்டு விளங்குவது.
அது எது என்றால், மக்கள் இரவும் பகலும் பேசிவரும் சொல்லே ஆகும். குழந்தைப்
பருவத்திலிருந்து பற்பல சொற்களைக் கற்றுப் பேசி அறிவை வளர்ப்பது மனித வாழ்வு.
மனிதன் எண்ணும் எண்ணங்கள் எல்லாம் சொற்களை அடிப்படையாகக்
கொண்டவைகளே. சொற்கள் இல்லையானால் எண்ணம் இல்லை. அறிவு இல்லை.
நாகரிகம் இல்லை. மரம் பட்டுப் போகும் வரையில் இலைகள் இல்லாமல் வாழ
முடியாது. மனிதன் மனமற்ற நிலை அடையும் வரையில் சொற்களை விட்டு வாழ
முடியாது. மனித வாழ்வில் நீக்கமற நிறைந்துள்ள பொருளாகிய சொற்களைக் கொண்டு
ஒலிநயத்தோடு அமைந்துள்ளது பாட்டு. இவ்வாறு அமைந்த பாட்டுக் கலையை மறத்தல்
எளிது அன்று; புறக்கணித்தலும் எளிது அன்று.
 
     மூன்றாவதாக, ஒரு சிறந்த காரணம் உள்ளது. மனிதன் கனவு காணும் இயல்பு
உடையவன்; இரவில் காணும் கனவோடு, பகற்கனவும் (கற்பனையும்) காணும் இயல்பு
உடையவன். இரவில் காணும், கனவு மூளை நரம்புகள் தாமாகவே காண்பது.
பகற்கனவாகிய கற்பனையோ மனிதன் தானே முயன்று காண்பது. தானாக முயன்றும்
முயலாமலும் இவ்வாறு வேறோர் உலகத்தில் வாழும் ஆற்றல் மனிதனுடைய மனத்திற்கு
அமைந்துள்ளது.