அன்றாட வாழ்க்கையின் தொல்லைகள் பலவற்றில் சிக்குண்டு தளரும் மனிதன். இதிலிருந்து விடுபட்டு வேறோர் உலகத்திற்குப் பறக்க முயல்கிறான். அதற்கு உதவுவதே கற்பனை என்னும் சிறகு. அவ்வாறு கற்பனையால் படைத்துக் கொள்ளும் உலகம் உண்மையுலகத்தை விட நல்லதாகவும் தொல்லை குறைந்ததாகவும் படைத்துக் கொள்கிறான்; தனக்கு உரிமை அளிக்கும் உலகமாகவும் படைத்துக் கொள்கிறான். இத்தகைய கற்பனையுலகம் வரலாற்று நூல்களிலோ, செய்தித் தாள்களிலோ இல்லை. ஆகையால்தான், வரலாற்று நூல்களைவிட, செய்தித்தாள்களை விடக் கதை நூல்களை மக்கள் விரும்பிப் படிக்கிறார்கள். கதைகளில் கற்பனை மட்டும் உள்ளது; பறந்து சென்று உரிமை இன்பம் தேடும் உலகம் மட்டும் உள்ளது. ஆயின் அந்தக் கற்பனையே ஒலிநயத்துடன் கூடிய சொற்களில் அமையும்போது பாட்டு ஆகிறது; பாடியும் கேட்டும் பழகிய பாட்டு, வெறுங் கற்பனைப் பயணமாக நிற்காமல், இன்பமான கலைப் பயணமாக மாறுகிறது. இத்தகைய பாட்டுக் கலையை மனிதனால் விடவே முடியாது எனலாம். | ஜான் ஸ்டுவர்ட் மில் (John Stuart Mill) என்னும் ஆங்கிலப் பேரறிஞர் ஒரு காலத்தில் வாழ்க்கையில் மிகச் சோர்வுற்றார். தாம் எண்ணிய எண்ணங்கள் அனைத்தும் ஈடேறிய போதிலும் தமக்கு இவ்வுலகில் இன்பம் இல்லை என்னும் அளவிற்கு அவருடைய சோர்வு வளர்ந்தது. தாம் கட்டிய இன்பக் கோட்டை இடிந்து விழுவதாக அவரே உணர்ந்தார். அதுவரையில் எல்லாவற்றையும் நுணுகிப்பகுத்துப் பகுத்து அறிந்த அறிவையே வளர்த்து வந்த அவர். அப்போது உற்ற தம் வீழ்ச்சிக்கும் சோர்வுக்கும் அந்த அறிவே காரணம் என்று குறித்துள்ளார். இத்தகைய சோர்ந்த நிலையிலிருந்து மாற்றிப் புத்துணர்ச்சி அளிக்க வேறு எதுவும் இல்லாமல் வருந்திக் கிடந்தார். | | |
|
|