ஆயின், சென்ற நூற்றாண்டின் இலக்கியம் இன்றும் பயன்படுகின்றது. முப்பது ஆண்டுகளுக்கு முன் பள்ளிக்கூடங்களிலும் கல்லூரிகளிலும் பயன்பட்டு வந்த அறிவியல் பாட நூல்கள், இன்று உள்ள மாணவர்களுக்குப் பயன்படாதன ஆகிவிட்டன. ஆயின் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சில பழந்தமிழ்ப் பாட்டுக்களே ஆயினும், இன்றும் தொகை நூற் பேழையில் பொன்போல் போற்றப்பட்டுக் கற்கப்பட்டு வருகின்றன. காரணம் என்ன? அறிவியல், மக்களின் வெளியுலகக் கருவிகள் பற்றியது. இலக்கியம் மக்களின் உள்ளத்து உணர்வு பற்றியது; வெளியுலகக் கருவிகள் வேகமாக மாறியமைவன; உள்ளத்து உணர்வுகள் அவ்வாறு மாறுவன அல்ல. | மாட்டு வண்டியும் குதிரை வண்டியும் மாறிப் புகை வண்டி, மோட்டார், ஆகாய விமானம் முதலியன வந்துள்ளன. வில்லும் வேலும் போய், நச்சுப்புகையும் அணுக்குண்டும் வந்துள்ளன. இவ்வாறு நேர்ந்துள்ள மாறுதல்களுக்குக் கணக்கு இல்லை. இவை எல்லாம் வெளியுலக வாழ்க்கையில் கண்ட மாறுதல்கள். உணர்வுலக வாழ்க்கையில் இவ்வளவு மாறுதல்கள் நேர்ந்துள்ளனவா? இல்லை என்று தான் கூறவேண்டும். ஏன் எனில், பழங்காலத்தில் இருந்த அன்பும் உறவும் பகையும் பிரிவும் இன்னும் உள்ளன. அக்காலத்தில் இருந்த காதலும், நட்பும், இக்காலத்திலும் உள்ளன. அன்று மக்கள் அழுததும், சிரித்ததும் போலவே இன்றும் அழுகின்றார்கள். சிரிக்கின்றார்கள். அழுகைக்கும் மகிழ்ச்சிக்கும் காரணமான துன்ப இன்ப உணர்வுகள் இன்னும் மாறவில்லை. ஆகையால் காணும் மாறுதல் எல்லாம் வெளியுலக வாழ்க்கையிலேதான் உள்ளன; உள்ளத்தில் உணரும் உணர்வுலகத்தில் அத்தகைய மாறுதல்கள் இல்லை. | | |
|
|