அறிவியலும் இலக்கியமும் | 161 | | இந்த உண்மையை உணர்ந்தால், வருங்காலத்தில் எவை எவை என்ன என்ன நிலைமையில் இருக்கக்கூடும் என்று தெரியலாம். | "இரட்டை மாட்டு வண்டியின் வருங்காலம் என்ன?" என்று யாராவது கேட்டால், பள்ளிக்கூடத்துச் சிறுவர்களும் விடை கூறுவார்கள். எல்லோரும் ஏறக்குறைய ஒரே வகையான விடையைக் கூறுவார்கள். வரவர இரட்டை மாட்டு வண்டிகள் குறைந்து போய், ஒரு காலத்தில் இல்லாமலே போகக்கூடும் என்றும், மோட்டார் லாரிகள் எங்கும் பெருகிவிடும் என்றும் எல்லோரும் கூறுவார்கள். இரட்டைமாட்டு வண்டி வெளியுலக வாழ்க்கை பற்றியது; அவ்வாழ்க்கைக்குக் கருவியாக இருப்பது. ஆகையால், முயற்சிச் சுருக்கத்தையும் பயன் பெருக்கத்தையும் தேடும் மனிதன், இன்னும் புதிய புதிய கருவிகளைக் கண்டுபிடித்துக் கொண்டே மாறுதல் செய்யக்கூடும் என்று எல்லோரும் நம்புகின்றார்கள். இரட்டை மாட்டு வண்டியின் வருங்காலத்தைப் பற்றி எல்லோரும் இவ்வாறு எளிதில் எண்ணுவதுபோல், இலக்கியத்தின் வருங்காலத்தைப் பற்றி எண்ணிவிட முடியாது. | பழங்காலத்துக் காதலருடைய உடை முதலியவை வேறு வேறாக இருந்தன; இக்காலத்துக் காதலருடைய உடை முதலியவை வேறு வேறுதான். ஆனால் காதல் என்னும் உணர்வு மாறாமல் இருந்து வருகின்றது. பழங்காலத்து அரசியல் அமைப்பு வேறு; இக்காலத்து அரசியல் அமைப்பு வேறு. ஆனால் மக்களுக்குள் பகை, நட்பு முதலிய மனப்பான்மைகள் மாறாமல் பழங்காலம் போலவே இருந்து வருகின்றன. ஆகையால், உள்ளத்து உணர்வு மாறாதவரைக்கும், அவற்றின் கலைவடிவமான | | |
|
|