பக்கம் எண் :

162 இலக்கிய ஆராய்ச்சி
 
இலக்கியமும் மாறாமல் வாழ வல்லதாகும். ஏடும் எழுத்தாணியும் போய் அச்சும் அச்சு
நூல்களுமாகப் புறத்தோற்றம் மாறலாம். ஆயினும் கலைஞர்கள் ஆக்கிய இலக்கியக்
கலை மாறாமல் இருந்து வரும்.
 
  செந்தார்ப் பைங்கிளி முன்கை ஏந்தி
இன்றுவரல் உரைமோ சென்றிசினோர் திறத்தென
இல்லவர் அறிதல் அஞ்சி மெல்லென
மழலை இன்சொல் பயிற்றும்
நாணுடை அரிவை....

(அகம்)
 

என்று யாரோ ஒருவர் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் பாடிய அடிகளை இன்றும்
படிக்கின்றோம்; படித்து உணர்கின்றோம்; அந்தப் புலவரின் கற்பனையில் ஒரு பகுதியை
நாமும் காண்கின்றோம். இரண்டாயிரம் ஆண்டுகள் கழித்தும் இன்னும் அந்த அடிகள்
படிக்கத் தகுந்த அடிகளாக, உணரத் தகுந்த உணர்ச்சி அமைந்த அடிகளாக
இருக்கின்றன. ஆனால், அந்தக் காலத்தில் இருந்த ஊர்தியோ, உடையோ,
எழுத்தாணியோ, வேறு கருவியோ இப்போது நம் கையில் கிடைத்தால், அவற்றைப்
பயன்படுத்த முடியுமோ? பொருட்காட்சிச் சாலையில் வைத்துப் போற்றுவோம்;
எப்போதேனும் ஒரு முறை பார்த்து ஒரு சிறிது எண்ணுவோம்; அவ்வளவு தான்
முடியும். அக்காலத்தில் வாழ்ந்த பாரிவள்ளலின் தேர் இப்போது நமக்கு கிடைத்தது
என்று வைத்துக் கொள்வோம். நம் மோட்டாரை விட்டுவிட்டு அந்தத் தேரில் ஊர்ந்து
செல்ல விரும்ப மாட்டோம். ஆனால் பாரியின் மகளிர் பாடிய பாட்டு நம் கண்ணில்
பட்டால், செய்யும் தொழிலையும் விட்டு, படிக்கும் செய்தித் தாளையும் மறந்து,