இருக்காது" என்று அவர் குறித்துள்ளார். ஆகையால் காலப் போக்கிற்கு ஏற்ப இலக்கியத்தின் அமைப்பு மாறும் என்பது மறக்க முடியாத உண்மையாகும். | தமிழிலும் இத்தகைய மாறுதல்கள் அடிக்கடி நேர்ந்து வந்திருக்கின்றன. அகநானூறு, புறநானூறு முதலிய நூல்களில் உள்ள தனிப் பாடல்களின் அமைப்பு வேறு; சிலப்பதிகாரம், மணிமேகலை முதலியவற்றின் அமைப்பு வேறு; சமயப் பாடல்களின் அமைப்பு வேறு; சீவக சிந்தாமணி, பெரிய புராணம், கம்பராமாயணம் முதலியவற்றின் அமைப்பு வேறு. பிறகு பல்வகைப் பிரபந்தங்களும் தனிப் பாடல்களும் தோன்றின. இப்படியே பல வகையான அமைப்பைப் பெற்றது. பழையபடி தனிப் பாடல்களும் இசையோடு கூடிய பாடல்களும், குயில் பாட்டு, பாஞ்சாலி சபதம் முதலிய சிறு காவியங்களும் தோன்றியுள்ளன. அவருக்குப் பின் தோன்றியவர்களும் அவ்வகை இலக்கியங்களை ஆக்கியுள்ளனர்; ஆக்கி வருகின்றனர். | இலக்கிய அமைப்பின் மாறுதல் இவ்வளவில் நின்று விடவில்லை. கற்றலின் கேட்டலே நன்று என்று இருந்த காலத்தில், கற்பதை விடக் கேட்டறிவதற்கு வாய்ப்பு மிகுதியாக இருந்த காலத்தில், இலக்கியம் செய்யுள் வடிவிலே வாழ முடிந்தது. கேட்டறிவதைவிடக் கற்றறிவதற்கு வாய்ப்பு மிகுந்தவிட்ட காலம் இது. தனியே மூலையில் உட்கார்ந்து பல நூல்களை அடுக்கி வைத்துக் கொண்டு ஒவ்வொன்றாக எடுத்துப் படிக்கும் வாய்ப்பை அச்சுப்பொறி தந்துவிட்டது. ஆகையால் இலக்கியம் செவிவாயிலாக இன்பம் நல்குவதோடு, கண் வாயிலாகவும் இன்பம் நல்க முடிகின்றது. அன்றியும், பலமுறை திரும்பத் திரும்பக் கற்றுச் செய்யுள் இலக்கியத்தில் பயிற்சி பெறல் எல்லோர்க்கும் இயலாது. | | |
|
|