பக்கம் எண் :

 அறிவியலும் இலக்கியமும் 165
 
ஒரு சிலர்க்கே இயலும். ஆகையால் மற்றவர்களின் கைக்கு எட்டக்கூடிய எளிய
இலக்கியமும் வேண்டியதாயிற்று. மூன்றாவதாக மற்றொரு காரணமும் உண்டு. அதாவது,
அறிவியல் முன்னேற்றத்தால் நகர வாழ்க்கையும் பரப்பரப்பான தொழில்முறையும்
பெருகிய நிலையில் மக்களின் வாழ்வில் ஓய்வு குறைந்தது. அதனால் குறைந்த
நேரத்தில் இலக்கியத்தின் பயனைத் துய்க்க வேண்டும் என்று
விரும்புகின்றவர்களுக்காகவும் புதிய வகையில் இலக்கியம் தோன்ற வேண்டியதாயிற்று.
இக் காரணங்களால் உரைநடை இலக்கியம் விரைந்து வளரத் தொடங்கியது. உள்ளத்து
உணர்வுகளையும் கற்பனைக் கருத்துக்களையும் செய்யுள் வடிவில் ஊட்டுவதோடு
நிற்காமல், உரை நடையிலும் ஊட்ட விரும்பிய கலைஞர்களின் முயற்சியால் தோன்றிய
இலக்கியங்களே தொடர்கதைகளும் சிறு கதைகளும். தொடர்கதைகள் பழங்காலத்துத்
தொடர் நிலைச் செய்யுள் போன்றவை. சிறுகதைகள் தனிச் செய்யுட்கள் போன்றவை.
காவியங்களும் தனிப் பாடல்களும் பயிற்சி மிகுந்தவர்களுக்கு மட்டுமே பயன்படும்.
அவற்றின் இடத்தில் அவற்றிற்கு ஒருவாறு ஈடாகத் தோன்றிய தொடர் கதைகளும் சிறு
கதைகளும் பயிற்சி குறைந்தவர்களுக்கும் பயன்படுவன; பெரும்பான்மையான மக்களுக்கு
இலக்கிய உணவு நல்குவன.
 
     அறிவியல் முன்னேற்றத்தால் அமைந்த மேற்கூறிய காரணங்களால் - அச்சு நலம்,
கற்றறியும் வாய்ப்பு, பரபரப்பான வாழ்வு ஆகியவை - வருங் காலத்திலும் இருக்கப்
போகின்றன. வீடுதோறும் நூல் நிலையம் இருக்கக் கூடிய வகையில் அச்சுப்பொறியில்
முன்னேற்றமும் மக்கள் வாழ்வில் நலமும் உயர்வும் வருங்காலத்தில் ஏற்படும் என
நம்பலாம். எல்லோரும் எழுத்தறிவு பெற வேண்டும் என்று இன்று உள்ள ஆசை
வளர்ந்து, எல்லோரும் உயர் கல்வி