பக்கம் எண் :

166 இலக்கிய ஆராய்ச்சி
 
பெற வேண்டும் என்ற நிலை வரும். எல்லோரும் பற்பல இலக்கிய நூல்களைக் கற்றுப்
பயன் பெறுவர். நகர வாழ்க்கையும் பரபரப்பும் கடமை நெருக்கும் எதிர்காலத்திலும்
இருக்கப் போகின்றன. குறைந்த முயற்சியில் இயன்ற பயனைத் தரும் இலக்கியங்களை
நாடும் நாட்டமும் எதிர்காலத்தில் குறையப் போவதில்லை. ஆகையால் வருங்காலத்தில்
தொடர்கதைகளும் சிறு கதைகளும் பெருகுவது உறுதி எனக் கொள்ளலாம்.
தொடர்கதையும் சிறுகதையும் நாடக வடிவில் எழுதப் பெறும்போது முழு நாடகமாகவும்
ஓரங்க நாடகமாகவும் இலக்கிய வடிவு பெறும். அத்தகைய நாடக நூல்களுக்கும்
வருங்காலத்தில் நல்வாழ்வு உண்டு.
 
     இவ்வாறு கூறுவதைக் கொண்டு செய்யுள் வடிவான இலக்கியத்திற்கு இடம்
குறையும் என்று கொள்ளலாகாது. உரைநடை இலக்கியம் வளரும் என்றால், செய்யுள்
இலக்கியம் தேயும் என்பது கருத்து அன்று. சினிமாக் கலை வளர்ச்சியால் நாடக மேடை
ஓரளவு செல்வாக்கை இழந்திருக்கலாம். நிழற்படம் பெருகியதால் ஓவியக் கலை ஓரளவு
புறக்கணிக்கப்பட்டிருக்கலாம். இவற்றைப் போல் உரைநடை இலக்கியத்தின் வளர்ச்சியால்
செய்யுள் இலக்கியம் சிறிதளவு குறையலாம்; ஆனால் மங்கும் என்று கூற முடியாது.
 
     பழகப் பழகவே நட்புச் சிறப்புப் பெறும்; பயிலப் பயிலவே இலக்கியமும் சிறந்து
நிற்கும். கண்டவர்களோடு எல்லாம் முகம் மலர்ந்து பேசும் மேற்போக்கான பழக்கம்
இக்காலத்தில் மிகுந்திருத்தலைக் காணலாம். அதனால் ஆழ்ந்த அன்புடைய நண்பர்கள்
உலகில் இல்லாமல் போகவில்லை. அவர்களுக்குச் சிறப்பிடம் இருந்தே வருகின்றது.
அதுபோலவே, ஒருமுறை இருமுறையில்