கலைஞர்களும் இருந்தே தீர்வார்கள்; அந்த உணவை நாடித் தேடும் கலைப் பசியும் மக்களுக்கு இருந்தே தீரும். | இன்று எல்லாக் கலைக் கூடங்களிலும் சிறப்பிடம் பெற்று விளங்குவது அறிவியல். ஆயினும் அது இலக்கியத்தோடு போட்டியிட முடியாது. சைக்கிளைக் கண்டு பிடித்தவர் பெயர் மறக்கப்பட்டது போல, வானொலியைக் கண்டு உதவியவரின் பெயரும் போற்றப்படாமல் போகும் காலம் வரலாம். முதன்முதலில் கடிகாரம் செய்து உதவியவரையும் அவருடைய அறிவின் ஆற்றலையும் இன்று போற்றுவார் யார்? கடிகாரம் போலவும் பேனா போலவும் வானொலி முதலிய சிறந்த அறிவியல் கருவிகளும் சாதாரணப் பொருள்களாகத் தொழிற்சாலைகளிலும் கடைத் தெருக்களிலும் மலியும் காலமே வருங்காலம். இன்று வியப்புக்கு உரிய அறிவியல் பாடங்கள் பலவும் வருங்காலத்தில் கற்று அறிய வேண்டாத பகுதிகளாகப் பழக்கத்தில் வந்துவிடும். ஆனால் அப்போதும் மக்களின் உள்ளத்தைத் தொட்டு, உணர்வு என்னும் ஊற்றைப் பெருக்க வல்லதாக இலக்கியம் நிலைபெற்று விளங்கும். | | |
|
|