ஒப்பிட்டுத் தான் சீர்திருந்துதல், பிறருடைய கலைகளைக் கண்டு தானும் அவற்றைப் படைத்து மகிழ்தல் முதலிய பல நன்மைகள் அவன் பெற்றது உண்டு. அவ்வாறே பிறருடைய போர்க்கருவிகள், தந்திரம், லஞ்சம், ஏமாற்றும் திறம் முதலானவைகளைப் பார்த்துக் கற்றுத் தீமைகளைப் பெருக்கியதும் உண்டு. | மனிதன் பெற்றுள்ள ஆற்றல் ஒவ்வொன்றையும் இவ்வாறே நன்மைக்கும் பயன்படுத்தலாம்; தீமைக்கும் பயன்படுத்தலாம். எழுதக் கற்றுக்கொண்டவன், அந்த எழுத்துக் கல்வியைப் பொய்க் கையெழுத்துக்கும் பயன்படுத்தலாம்; நல்ல செய்திகளை எழுதி அறிவிப்பதற்கும் பயன்படுத்தலாம். வலுப்பெற்ற கைகால்களைக் கொண்டு பிறரை அடித்தும் உதைத்தும் துன்புறுத்தலாம்; பிறருக்காக உழைத்துத் தொண்டும் புரியலாம். ஒவ்வொரு துறையிலும் ஒவ்வோர் ஆற்றலையும் மனிதன் எப்படிப் பயன்படுத்த வேண்டும் என்று ஆராய வேண்டுமே அல்லாமல், அந்த ஆற்றலைப் பழித்து வெறுக்கக் கூடாது. | எல்லோரும் இன்புற்றிருக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கம் உள்ள வாழ்க்கையில் ஒவ்வோர் ஆற்றலும் நன்மைக்கே பயன்படுகிறது. பிறரை அழித்தாவது தான் வாழ வேண்டும் என்ற தன்னலம் தலையெடுக்கும்போது, எந்த நல்ல ஆற்றலும் தீமைக்கே பயன்படுகிறது. ஆகவே, பிறரும் வாழ, தானும் வாழ வேண்டும் என்ற சிறந்த நோக்கம் ஒவ்வொருவருக்கும் அமைந்துவிட்டால், பிறவியில் அமைந்த ஆற்றல் எல்லாம் அரும் பயன் உடையனவாக விளங்கும். | இன்று செய்தித் தாள்கள் நாள்தோறும் பல்லாயிரக்கணக்காக ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மொழியிலும் வெளிவருகின்றன. இது நாகரிக | | |
|
|