பக்கம் எண் :

 உயர்வும் தாழ்வும் 173
 
வேண்டும் என்ற இயல்பான வேட்கையே. இந்த வேட்கையைத் தவறாகப் பயன்படுத்திக்
கொண்டு வேண்டாத காட்சிகளுக்கு அளவு மீறிய கவர்ச்சியூட்டிப் பெரும் பணம்
சேர்க்க முயலும் முயற்சியும் உண்டு. அது தவறு. அவ்வாறு ஏற்படும் தன்னலத்தைச்
சுருக்கிப் பொதுநலத்தைப் பெருக்குதலே நாடகமும் சினிமாவும் நடத்துவோரின்
கடமையாகும்.
 
     நூல் வடிவில் எழுதப்படும் நெடுங்கதைகளும் சிறு கதைகளும்
அப்படிப்பட்டவைகளே. அவைகளும், பிறர் வாழ்வை அறியும் வேட்கை இயல்பாக
இருத்தலையே புலப்படுத்துகின்றன. அவற்றிலும் வேண்டாத பகுதிகளும் தகாத
கவர்ச்சியும் இல்லாமல், நல்ல நோக்கத்தோடு எழுதும் மனப்பான்மை வேண்டும்.
அதுவே எழுத்தைத் தொண்டு என்று போற்றுவோரின் கடமை ஆகும். இதை மறந்து
தன்னலத்தைப் பெருக்க முற்பட்டால், தீய செய்தித் தாள்போலவும், தீய நாடகம்
சினிமாக்களைப் போலவும், தீமையே பெருக்குவதாக முடியும்.
 
     பிறர் வாழ்வை அறிய விரும்பும் இயல்பான வேட்கைக்கு அடிப்படை என்ன
என்று ஆராய்ந்து உணர்ந்தால், இந்தத் தீய போக்கில் செல்ல எவர்க்கும் மனம் வராது.
பிறரைப் பற்றி அறிந்து அவருடைய வாழ்க்கையின் நன்மை தீமைகளை உணர்ந்து நாம்
திருந்தி வாழ வேண்டும் என்ற முன்னேற்ற ஆசை ஒரு காரணமாக உள்ளது. மற்றொரு
காரணம் சமயத்தின் அடிப்படையில் உள்ளது; அதாவது, பிறர் வேறு, நாம் வேறு என்று
மேற்போக்காகத் தோன்றினும், அனைவரும் ஒன்றாய் முளைத்தெழுந்து எத்தனையோ
கவடு விட்டுப் பல்கியவர்களே. ஆகையால் பிறரிடமிருந்து நாம் பிரிந்து இருக்க
முடியாது; உணரவும் முடியாது; பிறரோடு இயைந்து உணர்தலே வாழ்க்கை நெறியாகும்.