பக்கம் எண் :

174 இலக்கிய ஆராய்ச்சி
 
இவ்வாறு பிறரோடு பிணைபட்டு நிற்கும் உண்மையை உணர்ந்தால் பிறருக்குத் தீமை
செய்து தான் மட்டும் வளர விரும்பும் தன்னலப் போக்கிற்கே இடம் இல்லை. ஆகவே,
செய்தித் துறையிலும் கலைத் துறையிலும் காணப்படும் தீமைக்குக் காரணம், அறியாமை
தவிர வேறென்ன கூற முடியும்?
 
     செய்தித்தாளைவிட நிலையான வாழ்வு பெறுவதோடு, உயர்வும் சுவையும்
பெறுமாறு முன்னோர் நாடகங்களையும், காவியங்களையும் அமைத்துள்ளனர். அந்த இரு
வகைக் கலைகளின் இடத்தைப் பெற்று இக்காலத்தில் வளர்ந்து வருவன சினிமாக்களும்
கதைகளும் ஆகும். இவற்றில் சுவை மிகுந்திருக்குமாறு, என்றும் புதியனவாய்த்
தோன்றுமாறு, வாழ்க்கையின் அடிப்படை உண்மைகளைப் புலப்படுத்த வேண்டும்.
இந்தத் தன்மைதான் என்றும் மாறாப் புதுமைக் கவர்ச்சியைத் தரவல்லதாகும். இதை
மறந்து விட்டு வேறு தகாத கவர்ச்சிகளை ஊட்டுவதில் பயன் இல்லை.
 
     காதல் துறை பற்றிப் பாடும் பாட்டிலும் நம் முன்னோர்கள் இந்தக் கடமையை
மறவாமல், எவ்வளவோ நல்ல கட்டுப்பாடுகளை வைத்துக் கொண்டு பாடி உள்ளனர்.
அகப் பொருளிலக்கணம் இதற்கென்றே அமைந்ததாகும். பழைய அகப்
பொருட்பாட்டுக்கள் இந்த நூற்றாண்டிலும் வியந்து போற்றிக் கற்கத் தக்கனவாக
உள்ளன; நெறி பிறழாத இலக்கியத் தொண்டுக்கு எடுத்துக்காட்டாகவும் உள்ளன. ஒன்று
காண்போம்:
 
     இளமையும் அழகும் நிறைந்து ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டனர்.
பெற்றோரும் மற்றோரும் அறியாமல் பழகினர்; இப்படி வாழும் வாழ்க்கை
இடையூறானது என்று காதலன் உணர்ந்தான். திருமணத்திற்கு உரிய முயற்சியை
மேற்கொள்ளப் போவதாகச் சொல்லிவிட்டுப் பிரிந்தான். பிரிந்தவன் சில நாள் வராமல்
நின்று விட்டான். ஆனால் இந்தக் காதல் செய்தியோ எப்படியோ