ஊரில் சிலருக்குத் தெரிந்துவிட்டது. இரண்டொரு நாள் பார்த்தவர்கள் மெல்ல இதைப்பற்றிப் பேசினார்கள்; பேச்சு மெல்ல மெல்லப் பரவிப் பலருக்கு எட்டிவிட்டது. ஊரின் பொது இடமாகிய மன்றத்திலும் இதே பேச்சாகி விட்டது. இந்த நிலையில் காதலன் வருவான் வருவான் என்று எதிர்பார்த்த காதலி வாடி வருந்தினாள்; அழகெல்லாம் இழந்து மெலிந்தாள். வீட்டின் ஒருமூலையில் கிடந்து கலங்கினாள்; முதல் முதலில் தான் காதலனைக் கண்டு பழகிய கடற்கரைச் சோலையை நினைந்தாள்; தன் அழகு படிப்படியாக நீங்கியதையும் நினைந்து, ஊரார் தூற்றும் அலரையும் நினைந்து வருந்தினாள். "யான் இங்கே கிடக்கிறேன்! என் அழகு, தீராத் துன்பத்திற்கு இரையாகி அந்தக் கடற்கரைச் சோலையோடு போய்விட்டது! அதற்குக் காரணமான காதலரோ, அவருடைய ஊரில் இருக்கிறார்! அவருடைய காதல் பழக்கமோ, பழிச் சொல்லாய் வளர்ந்து ஊர்ப் பொதுவிடத்திற்கு எட்டி விட்டது!" என்றாள். | | யானே ஈண்டை யேனே; என் நலனே ஆனா நோயொடு கான லஃதே; துறைவன் தம் ஊரானே; மறை அலராகி மன்றத் தஃதே | (குறுந்தொகை, 97) | இங்கு ஒரு பெண்ணின் வாழ்வைப் பற்றி அந்த ஊரார் பேசும் ஊர்வம்பும் காண்கிறோம்; அவளுடைய வாழ்வைப் பற்றியே வெண்பூதியார் என்ற புலவர் கூறுவதும் காண்கிறோம். ஊரார் பேசிக்கொள்வது அலர் - பழிச் சொல் - என்று இழித்துக் கூறப்படுகிறது. புலவர் பாடுவது உயர்ந்த கலை ஆகிறது. இரண்டும் ஒரு வகையில் ஊர் வம்பே; இரண்டும் பிறர் வாழ்வைப் பற்றிய பேச்சே. ஆனால் ஊராரின் பழிச் சொல் அந்தப் பெண்ணின் அழகைக் குலைக்கிறது; புலவரின் பாட்டோ அவளுடைய அழகையும் பண்பையும் விளக்குகிறது. காரணம் என்ன? | | |
|
|