பக்கம் எண் :

176 இலக்கிய ஆராய்ச்சி
 
ஊரார் வெறுஞ்சுவை கருதி அவளுடைய காதலைப் பற்றிப் பேசுவதில் இன்பம்
காண்கின்றனர். புலவரோ, மக்களின் வாழ்வை உயர்த்தும் கலைநோக்கம் கொண்டு
காதலைப் பாடுகிறார். ஊராரின் தன்னலம் அந்தப் பெண்ணின் வாழ்வுக்குத் தீமை
செய்கிறது; புலவரின் உயர்ந்த நோக்கு, அவளிடம் நம் உள்ளம் இரக்கம் கொள்ளுமாறு
செய்கிறது. இரண்டும், பிறர் வாழ்வை அறியும் வேட்கையையும் அறிவிக்கும்
வேட்கையையும் அடிப்படையாகக் கொண்டவைகளே. ஆனால் ஒன்றின் குறுகிய
தன்னல நோக்கம் ஊறுவிளைக்க, மற்றொன்றின் பரந்த கலை நோக்கம் உயர்வு
விளைவிக்கின்றது. இயல்பான ஒரே வகை வேட்கை, நோக்கத்திற்கு ஏற்பத் தாழ்ந்தும்
உயர்ந்தும் பயன்படுதலைக் காணலாம். செய்தித்தாள், மேடைப்பேச்சு, நாடகம், சினிமா,
கதை முதலியன தாழ்தலும் உயர்தலும் இப்படியே ஆகும். ஆகவே கலையை
உயர்த்துவது எது எனின், அதைப் படைப்பவரின் உயர்ந்த நோக்கமே எனலாம்.