பக்கம் எண் :

23. கற்கும் முறை  
 
     கணக்குக் கற்கும் முறை வேறு; வரலாறு கற்கும் முறை வேறு; நிலவியல்
முதலியவற்றைக் கற்பதற்கு உரிய முறை வேறு; நீதி நூல்களையும் சமய நூல்களையும்
கற்கும் முறை வேறு; கதைகளையும் காவியங்களையும் கற்கும் முறை வேறு.
 
     கணக்குக் கற்கும் ஒருவன் தன் முயற்சியில் வெற்றி தோல்வியை ஒட்டிச் சிறு சிறு
உணர்ச்சிகளை அடைவானே தவிர, கற்கும் கணக்கில் ஒருவகை உணர்ச்சியும்
அடைவதில்லை. கணக்கில் அவனுடைய மூளை ஈடுபடுகிறது; பற்றற்று ஈடுபடுகிறது. சில
வேளைகளில் தன்னை மறந்தும் கணக்கில் ஈடுபடுகிறான். ஆனால், தன்னை இழப்பது
இல்லை; தான் கலப்பது இல்லை; நிலவியல் முதலியவற்றைக் கற்பவனுடைய நிலையும்
அத்தகையதே.
 
     வரலாற்றைக் கற்பவன் சிலர் வாழ்ந்த வாழ்வைக் கற்கிறான். ஒரு சில இடங்களில்
- உணர்ச்சிமிகுந்த இடங்களில் தவிர, மற்ற இடங்களில் - அவன் பெரும்பாலும் தான்
கலக்காமல், தன்னை இழக்காமல் கற்கிறான். வரலாற்று மாந்தர் உற்ற இன்ப
துன்பங்களைக் கேட்டறிவது போன்ற மன நிலையில் இருக்கின்றான்.
 
     நீதி நூல்களையும் சமய நூல்களையும் கற்பவன், ஆடையை வரிந்து
கட்டிக்கொண்டு மலை ஏறுபவன் போல்,