பக்கம் எண் :

178 இலக்கிய ஆராய்ச்சி
 
தன் உள்ளத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டு உயர்நிலைக்குச் செல்ல முயல்கின்றான்;
ஆதலின், அவனுடைய மனநிலையும் வேறு.
 
     கதைகளையும் காவியங்களையும் கற்பவன், அவற்றில் வாழும் மாந்தர்களின்
உலகத்தில் சென்றாக வேண்டும். தன்னை இழந்து கற்க வேண்டும். அயலார் வீட்டுக்
குழந்தைகளின் இன்ப துன்பங்களைக் கண்டு ஒரு சிறிது சிரித்தும், ஒரு சிறிது
இரங்கியும் கடந்து செல்லுதல் போல் அல்லாமல், தன் வீட்டுக் குழந்தைகளின் இன்ப
துன்பங்களில் இரண்டறக் கலத்தல் போன்ற மனநிலை வேண்டும். குழந்தை இடறி
விழும்போது, தாயின் நெஞ்சம் துணுக்குறும்; அவளை அறியாமலே அவளுடைய கைகள்
இடறித்தாவும். குழந்தை துள்ளி மகிழும்போது அவளுடைய உள்ளமும் துள்ளி மகிழும்.
குழந்தையின் துள்ளல் அவளுடைய உடல் நரம்புகளில் எல்லாம் துள்ளலாய் அமையும்.
குழந்தையின் மகிழ்ச்சி அவளுடைய முகத்தில் புன்முறுவலாய்த் திகழும். இவ்வளவுக்கும்
காரணம் தான் வேறு குழந்தை வேறு என்று இராமல், குழந்தையின் வாழ்வில் தன்
வாழ்வை இழக்கும் தியாக மனப்பான்மையே ஆகும்.
 
     இத்தகைய தியாக மனப்பான்மை கதையும் காவியமும் கற்பவர்க்கும், கற்கும் அந்த
நேரத்திற்கேனும், வேண்டும். இல்லையேல் அவற்றைக் கற்கும் தகுதி இல்லாதவர்
ஆவர்.
 
     சிலம்பு நாடகத்தை மேடையில் நடிக்கக் காண்பவர், கண்ணகியின் வாடிய
மேனியைக் கண்டு வாடுதல் வேண்டும்; அதே நிலையில் அவள் நெஞ்சத்தில் உள்ள
பொறுமையும் உறுதியும், நாடகத்தைக் காண்பவரின் நெஞ்சத்திலும் பதிய வேண்டும்.
மாதவியின் மகிழ்ச்சியில் உள்ளம் கலந்து மகிழ்தல் வேண்டும். கானல் வரிப் பாட்டில்
மனம் இயைய வேண்டும். கோவலனைப் பிரிந்த