பக்கம் எண் :

 கற்கும் முறை 179
 
பின்பு மாதவி உறும் துயரம் எல்லாம் காண்பவரும் உறுதல் வேண்டும். மதுரை
மாநகரில் கண்ணகியின் சீற்றம், பின்னர் அவலம் ஆகிய எல்லாம் காண்பவர்
உள்ளத்தில் எழுதல் வேண்டும். இல்லையேல் நாடகம் காணும் தகுதி இல்லாமலே
காலத்தைப் போக்கியவர் ஆவர்.
 
     நாடகத்தைக் கண்டு வீட்டிற்குத் திரும்பிய பின், ஒரு காட்சி நினைவுக்கு வரின்,
மேடையில் கண்டபோது அக்காட்சியால் பெற்ற உணர்ச்சியில் ஒரு பகுதியையாவது
திரும்பி வீட்டில் நினைக்கும் போதும் பெறுதல் வேண்டும். மறுநாள் தெருவில் செல்லும்
ஒருவன், "காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என் கணவன்!" என்ற சிலப்பதிகார
அடியை வாய்விட்டுப் பாடிச் சென்றால், அதைக் கேட்டவுடன் நாடகமேடையில்
கண்டவாறு அதற்கு உரிய காட்சியும் அந்தத் துன்பக் கொதிப்பும் உள்ளத்தே
தோன்றுதல் வேண்டும். இதுவே, கலையில் உள்ளம் பதிந்தது என்பதற்குச் சான்றாகும்.
 
     அறிவியல் துறையில் அருந்தொண்டு புரிந்த குயூரி அம்மையாரின்
வாழ்க்கையைத் திரைப்படமாக ஆக்கியுள்ளனர். கணவர் கடைத்தெருவில் வண்டியில்
அகப்பட்டு உயிர் துறக்கும் காட்சிக்குப் பின்னர், அந்தச் செய்தி குயூரி
அம்மையாருக்குத் தெரிவிக்கப்படும் காட்சி உள்ளது. அறிவில் சிறந்த அந்த
அம்மையார் அப்போது உறும் துயரம், திடுக்கீடாய்ப் பேரமைதியாய்த் திகைப்பாய்ப்
பேச்சற்ற நிலையாய்ப் பெருமூச்சாய் வளர்கின்றது. அந்தப் பெருந்துயர், குயூரி
அம்மையாரின் கண்ணீர் வாயிலாகத் தோன்று முன்னமே காண்பவரின் கண்களைக்
கலக்குகின்றது. காண்பவர்க்குத் திடுக்கீடு விளையாமற் போயினும், பேச்சற்ற நிலையும்
பெருமூச்சு விடும் நிலையும் வந்துவிடுகின்றன. திரைப்படத்தில் நிழலின் காட்சியாய்
உள்ள இந்த துயரம், காண்பவர்க்கு உண்மைத் துயரமாய்த் தோன்றி உள்ளத்தை
உருக்குகின்றது