பக்கம் எண் :

18 இலக்கிய ஆராய்ச்சி
 
வேண்டும். செய்தித்தாள் இத்தகையது என்று கூறலாம். ஆனால் அதுவும் நிழற்படம்
போன்ற கருவி அன்று; அந்தச் செய்தித்தாள் எழுதும் அறிஞரின் உள்ளத்து
உணர்வுடன் கூடியே வெளி வருகின்றது. நிகழ்ச்சிகளோடு ஆசிரியர் கருத்தும் கலக்க,
சிறிது வேறுபட்ட வடிவமே பெறுகின்றது. 1942-ல் கல்கத்தாவின் தெருக்களில் நானூறு
மக்கள் நாள்தொறும் பட்டினியால் மடிந்ததாக அங்கிருந்து வந்த மக்கள் கூறினர்;
நாற்பது பேர் நாள்தோறும் மடிந்ததாகப் பத்திரிகைகள் எழுதின; நாலைந்து பேர்
மெலிந்து சோர்ந்து உயிர் துறந்ததாக அரசாங்கம் தெரிவித்தது. பத்திரிகைகள் பயந்து
எழுதுகின்றன என்றனர் பொதுமக்கள். எதிர்க் கட்சிப் பத்திரிகைகள் வேண்டுமென்றே
மிகைப்பட எழுதுவதாக அரசாங்கத்தார் குறை கூறினர். எது உண்மை? இன்றும்
காணலாம்; ஓர் ஊரில் நடந்த கலகத்தைப் பற்றி ஒரு கட்சிப் பத்திரிகை ஒருவகையாக
எழுதுகின்றது; அதையே மற்றொரு கட்சித்தாள் வேறு வகையாக எழுதுகின்றது.
ஆகையால் நிழற்படம் போன்ற உணர்வற்ற கருவியாகப் பத்திரிகையைக் கருத
முடியாது. அத்தகைய கருவி வாய்க்கும் வரையில் வரலாறு குறைபாடு உடையதாகவே
விளங்கும். ஆனால் காவியம் அத்தகைய குறை உடையதன்று; அதைக் கற்றுப்
பயன்பெற முடியாதவர்களின் குறையே குறையாக உள்ளது. 
 
     வரலாறு உண்மையை உணர்த்துவது போலவே காவியமும் உணர்த்துகின்றது.
ஆயின், வரலாறு உணர்த்தும் உண்மை ஒரு வகையானது, பாலின் சுவை வேறு;
தேனின் சுவை வேறு. சுவை வேறாக இருத்தல் பற்றி, தேன் சுவையற்றது எனக்
கூறலாகாது. காவியத்தில் உண்மை காணாதவர், இவ்வாறு தேனின் சுவை காணாதவரே
ஆவர்.